அனுபமா பரமேஸ்வரனுக்கு தெலுங்கு இயக்குநர் கொடுத்த டார்ச்சர்.. மேடையில் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க!
பெங்களூரு: இளம் நட்சத்திரங்களான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள “கிஷ்கிந்தபுரி” திரைப்படத்தை இளம் இயக்குனர் கௌஷிக் பெகள்ளப்பட்டி இயக்கியுள்ளார். ஷைன் ஸ்கிரீன்ஸ் பதாகையின் கீழ் சாஹு காரபதி தயாரித்துள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 12 அன்று வெளியாகவுள்ளது.
திருமதி அர்ச்சனா வழங்கும் இப்படத்தில் ஹைப்பர் ஆதி, நெல்லூர் சுதர்ஷன், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இத்திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்க, சின்மய் சலாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், மனிஷா ஏ தத் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், டி சிவ காமேஷ் கலை இயக்குனராகவும், நிரஞ்சன் தேவரமனே எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.

படத்தின் விளம்பர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 3 அன்று ஹைதராபாத் ஐமாக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சாய்குமார் ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், சாஹு காரபதி, இயக்குனர் கௌஷிக், இசையமைப்பாளர் சைத்தன் பரத்வாஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அனுபமா பரமேஸ்வரன் இவ்விழாவில் பேசுகையில், “திகில் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வகை. இந்த வகையான கதையை கௌஷிக் கூறியபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் மூன்று வயதிலிருந்தே திகில் படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமா துறைக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக திகில் கதைக்காகக் காத்திருந்தேன்.”
“கௌஷிக் கூறிய கதை எனக்கு மிகவும் உற்சாகமளித்தது. அவர் கூறிய கதை எனக்கு முதலில் புரியவில்லை; ஆனால் அவர் கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் முடிந்தால் வசனங்களைப் புரிந்துகொள்ள ஒரு அகராதியைக் கொண்டு செல்லுங்கள்,” என்று நகைச்சுவையுடன் கூறினார்.
டார்ச்சர்: மேலும், “இயக்குனர் கௌஷிக் உடன் பணிபுரிந்தது மிகவும் நன்றாக இருந்தது. கிளைமாக்ஸில் என் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. அவருக்குக் கதை மற்றும் உருவாகும் படம் குறித்து முழுமையான தெளிவு உள்ளது. பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் இந்த படத்தின் மூலம் வழங்குகிறோம். வசனங்களை பேசுவதில், டப்பிங் ஸ்டுடியோவில் அவர் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார். ஆனால் சரியான முறையில் வசனங்களை பேச என்னைப் பயிற்றுவித்தார். தயாரிப்பாளர் சாஹுவுடன் இதற்கு முன் ஒரு படம் செய்துள்ளேன். மீண்டும் இரண்டாவது படம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துகொண்டார்.

பேய் கதாபாத்திரம்: “கிஷ்கிந்தபுரி” படத்தில் தான் ஒரு பேயாக நடிப்பதாகக் குறிப்பிட்ட அனுபமா, “இயக்குனர் இந்த விஷயத்தை வெளிப்படுத்தியபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு எனக்கு வந்துவிட்டதா என்ற உணர்வு ஏற்பட்டது. காலையில் எழுந்தவுடன் என் அம்மா என்னை ஒரு பேய் போல இருக்கிறாய் என்று திட்டுவார். இது இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. பேய் கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் சரியாகப் பொருந்துவேன். ஏன் எனக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்று எனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.
படங்கள்: அனுபமா பரமேஸ்வரனின் சினிமா வாழ்க்கையைப் பொருத்தவரை, சமீபத்தில் வெளியான “ஜானகி வெட்ஸ் கேரளா ஸ்டேட்” மற்றும் “பரதா” ஆகிய படங்கள் மூலம் பார்வையாளர்களைச் சந்தித்தார். தற்போது “கிஷ்கிந்தபுரி” படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்தார். தமிழில் பைசன் படத்தில் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











