அக்காவிற்கு பிறந்த நாள் பார்ட்டி கொடுத்த நகுல்.. தம்பியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட தேவயானி!
சென்னை: 1995 ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச் சிணுங்கி' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தேவயானி. இதை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து காதல் கோட்டையில் நடித்த தேவயானிக்கு அந்த படம் வெற்றிப்படமாக அமைந்து பெயரை பெற்றார். இன்று நடிகை தேவயானி தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தனது தம்பியுடன் செம ஆட்டம் போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். காதல் கோட்டை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்ய வம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, தெனாலி, பஞ்சதந்திரம், ஆனந்தம் ஆகிய வெற்றிப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பிடித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர், இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய படத்தில் நடித்த போது, காதல் ஏற்பட்டு பின், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். தேவயானியின் மூத்த மகள் இனியா, Zee தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி வருகிறார்.

பிறந்த நாள் வாழ்த்து: இந்நிலையில் நடிகை தேவயானியின் 51வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேவயானியின் தம்பியான நடிகர் நகுல், தனது அக்காவிற்கு பார்ட்டி வைத்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை தேவயானி தம்பி உடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை நடிகர் நகுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
நடிகர் நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, காதலில் விழுந்தேன்'படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக 'வாஸ்கோடகாமா' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


Click it and Unblock the Notifications











