என் புருஷனை சந்தானம் மிகவும் மோசமாக கலாய்க்கிறார்.. எனக்கு அது பிடிக்கல.. தேவையாணி வருத்தம்!
சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் தேவயானியும் ஒருவர். வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது, படம் தோல்வியைத் தழுவினாலும் இவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்துவது என கலக்கிக் கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கணவரை சந்தானம் மிகவும் மோசமாக கலாய்க்கிறார் என வருத்தப்பட்டு பேசியுள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
நடிகை தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம் தான். மேலும், இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்றால், தேவயானிக்கு என்ன ஆச்சு என்றெல்லாம், இவர்களின் திருமணம் குறித்து பலரும் பலவிதமாக பேசினர். ஆனால் இருவரும் கடந்த 24 ஆண்டுகளாக தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக உள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் பாராட்டுக்குரிய தம்பதிகளாக இவர்களைக் கூறலாம்.

சந்தானம்: ராஜகுமாரன் - தேவயானி தம்பதியருக்கு இனியா குமாரன் மற்றும் பிரியங்கா குமாரன் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்று கொண்டுள்ளது. தேவயானியும் , இயக்குநர் ராஜகுமாரனும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்கள். இதில் ராஜகுமாரன் சந்தானம் கதாநாயகனாக நடித்த, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருப்பார். அந்த படம் நகைச்சுவை படம் என்பதால் சந்தானம் ராஜகுமாரனை மிகவும் பயங்கரமாக கலாய்த்து இருப்பார்.
வருத்தம்: இந்நிலையில் நடிகை தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது கணவரை சந்தானம் கலாய்த்தது பிடிக்கவில்லை என்றும், அது வருத்தம் அளித்தது என்றும் தெரிவித்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் பேசும்போது, " சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு அந்த விஷயமே பிடிக்கவில்லை. எனது கணவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று தெரியும். ஆனால் இது போன்ற கதாபாத்திரம் என்று எனக்குத் தெரியாது. எனது கணவர் ஏற்று நடித்துள்ளார். ஆனால் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

பெருமை: எனக்கு அந்த கதாபாத்திரம், சந்தானம் எனது கணவரைக் கலாய்ப்பது பிடிக்கவில்லை என்று எனது கணவரிடம் சொல்லிவிட்டேன். நான் இதுவரை அந்த படத்தை முழுவதுமாக பார்க்கவும் இல்லை. எனக்கு கடுகு படம் மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் எனது கணவருக்கு சிறப்பான கதாபாத்திரம் கொடுத்த விஜய் மில்டன் சாருக்கு மிகவும் நன்றிகள். எனது கணவருக்கு மிகவும் நல்ல கதாபாத்திரம் கொடுத்து, அவரை சிறப்பாக உருவாக்கி, அவருக்காகவே ஒரு படம் எடுத்தது போல கடுகு படத்தை இயக்கியிருக்கிறார். சந்தானம் படத்தில் நடித்ததை விட்டுவிடுங்கள். ஆனால் பாருங்கள் அவரால் இப்படி கூட ஒரு படத்தில் நடிக்க முடியும் என்று காட்டியுள்ளார். கடுகு படத்தில் அவர் நடித்ததை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்" என்று பேசியுள்ளார். கடுகு படம் கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத் கதாநாயகனாக நடித்து வெளியானது.


Click it and Unblock the Notifications











