Devayani: இப்படித்தான் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டேன்.. காதல் கதையை ஓபன் செய்த தேவயானி!
சென்னை: நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 90களின் கடைசியிலும் 2000களிலும் டாப் ஆர்டிஸ்டாக இருந்தவர். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள தேவயானி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததில் இருந்து சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார். ஆனாலும் சின்னத்திரையில் நெடுந்தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நிழற்குடை படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை தேவயானி சரத்குமாரின் சூரியவம்சம் படத்தில் நடித்தபோது உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரனின் அறிமுகம் கிடைக்கிறது. அதன் பின்னர் அவரது இயக்கத்தில் நீ வருவாயென மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் நீ வருவாயென, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், தேவயானி மற்றும் ராஜகுமாரனின் புறத்தோற்றம் தான். ஆனால் தேவயானி மிகத் தெளிவாக தனது வாழ்க்கைத் துணையாக வருபவர் ஒழுக்கம் உள்ளவராக, அன்பு கொண்டவராக, உண்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைத்து ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக நடிகை தேவயானி அண்மையில் அளித்த பேட்டியில் தனது காதல் கதை மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

காதல் & திருமணம்: அதாவது, " சூரியவம்சம் படத்தின் போது தான் எனக்கு அவரைத் தெரியும். அந்த படத்திலேயே நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறி விட்டோம். அப்படி இருக்கும்போது நீ வருவாயென படத்தில் நடிக்க கேட்டு வந்தார். இருவரும் இணைந்து பணியாற்றினோம். எனக்கு அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. அதன் பின்னர் மற்றவர்களும் அவர் குறித்து பாசிடிவாக சொன்னார்கள். அவரிடத்தில் ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. நேர்மையாக இருப்பார். உண்மையான அன்பைக் கொடுக்கிறார் எனும் போது, அவரை எப்படி விட முடியும். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
குடும்பத் தலைவர்: அதன் பின்னர் எங்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா பிறந்தார்கள். மிகவும் பாசக்கார அப்பா. அதே நேரத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். குழந்தைகளிடத்தில் நான் கண்டிப்புடன் இருக்கும் போது, அவர் மிகவும் இலகுவாக இருப்பார். அதேபோல் அவர் கண்டிப்புடன் இருக்கும் போது நான் இலகுவாக இருப்பேன். அவரைப் பார்த்தால் தான் குழந்தைகளுக்கு கொஞ்சம் பயம். என்னைப் பார்த்து அவர்களுக்கு கொஞ்சம் கூட பயமில்லை. குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குறித்துதான் நிழற்குடை படத்தில் நாங்கள் பேசியுள்ளோம்.

வாழ்க்கை துணை: அதேபோல் அவர் மிகவும் திறமைசாலி. அவரிடத்தில் இருக்கும் திறமை இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை. நீ வருவாயென படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என்று கூறுகிறார் பார்க்கலாம். மொத்தத்தில் ஒரு அன்பான கணவராகவும் பொறுப்பான அப்பாவாகவும் சிறந்த குடும்பத் தலைவராகவும் உள்ளார். ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவாரோ அதேபோல்தான் எனக்கு எனது கணவர் அமைந்துள்ளார்" என்று தேவயானி அந்த பேட்டில் பேசியுள்ளார். இவரது இந்த பேட்டி வேகமாக பரவி வருகிறது. தேவயானி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











