Hansika motwani: சோகங்களை மறந்து.. அம்மாவுடன் திருப்பதிக்கு வந்த ஹன்சிகா மோத்வானி!
சென்னை: 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது அழகால் ரசிகர்களால் 'குட்டி குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த சில மாதங்களாகவே இவரது தனிப்பட்ட வாழ்க்கை சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியிருந்த நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானி: அம்மாவுடன் திருப்பதியில்: கடந்த 2022-ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹேல் கதுரியாவைத் திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, கருத்து வேறுபாடு காரணமாகத் கடந்த மார்ச் மாதம் மும்பை பந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். எந்தவித ஜீவனாம்சமும் தேவையில்லை என்று கூறி கண்ணியமாக திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹன்சிகா, தற்போது தனது தாயார் மோனா மோத்வானியுடன் வசித்து வருகிறார்.

சோகங்களை மறந்து: விவாகரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபட அண்மையில் வெளிநாடுகளுக்கு ஜாலியாகச் சுற்றுலா சென்று திரும்பிய ஹன்சிகா, இன்று காலை தனது தாயாருடன் திருப்பதி திருமலைக்கு வருகை தந்தார். திருப்பதி கோவில் கோபுரப் பின்னணியில், சுடிதாரில், பக்திமயமாகத் தலையைக் குனிந்தபடி ஹன்சிகா நடந்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோவில் தேவஸ்தானம் சார்பில் ஹன்சிகாவிற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கைவசம் உள்ள படம்: தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்களை ஓரங்கட்டிவிட்டு, தற்போது ஹன்சிகா கைவசம் அடுத்தடுத்துப் பல திரைப்படங்கள் லைன்-அப்பில் உள்ளன. தமிழில் ஜே.எம்.ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'ரவுடி பேபி', ஆர்.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் 'காந்தாரி', மேன், லவ் அஃபையர், சத்தாம் சிவன் மற்றும் 'நஷா' என்கிற இணையத் தொடரிலும் நடித்து வருகிறார். திருப்பதிக்கு அம்மாவுடன் வந்த ஹன்சிகாவின் இந்த க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து, இனிமேலாவது உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும் என வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications