ஸ்ரீதேவி ரொம்பவே திமிர் பிடித்தவர்.. அப்படித்தான் நடந்துகொள்வார்.. ஜெயப்ரதா ஓபன் டாக்
சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் ஸ்ரீதேவி பற்றி ஜெயப்ரதா ஒரு பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி என்று கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி லீட் ரோலிலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மயில்: ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.
ஸ்ரீதேவி ரூல்: 16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ரஜினி, கமல் என அப்போது வளர்ந்து வந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஸ்ரீதேவி போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்.
ஹிந்தியில் மயில்: இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும், திறமையாலும் வெற்றிக்கொடியை நாட்டினார். அங்கும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகத்தையும் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைத்தார். அந்த சமயத்தில்தான் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க தனது குடும்பத்துடன் துபாய் சென்ற ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்பு அங்கு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர். இந்த சூழலில் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஸ்ரீதேவியை கொலை செய்யவில்லை என விளக்கமாக பேசியிருந்தார்.
ஜெயப்ரதா பேட்டி: இந்நிலையில் நடிகை ஜெயப்ரதா, ஸ்ரீதேவி குறித்து பேசுகையில், "நானும் ஸ்ரீதேவியும் படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். ஷூட்டிங்கின்போது மட்டும்தான் என்னிடம் அவர் பேசுவார். திமிராகத்தான் இருப்பார். ஏதேனும் சினிமா விழாக்களில் கலந்துகொள்கையில் பார்த்தால் பேசாமல் போய்விடுவார். மேலும் நான் அமர்ந்திருந்தபோது எனது அருகே நாற்காலி இருந்தாலும் தள்ளிப்போய்தான் அமர்வார். நாங்கள் தொடர்ந்து இணைந்து நடித்தாலும் ஒரு படம் ஆரம்பிக்கிறது என்றால் அவரிடம் வந்து இவர்தான் ஜெயப்ரதா என்று மற்றவர்கள் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











