திரிஷாவை தொடர்ந்து இப்போது குஷ்பூ.. வரிசையாக மிரட்டல்.. தமிழ்நாட்டில் என்னதான் நடக்குது?.. பெரும் பரபரப்பு
சென்னை: நடிகை குஷ்பூ இப்போது நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். பாஜகவில் ஐக்கியமாகியிருக்கும் அவர் தனது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திரிஷா, மன்சூர் அலிகான் வீடுகளுக்கும் இதேபோன்று மிரட்டல் வந்த சூழலில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ போட்டிருக்கும் ட்வீட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் அறிமுகமாகி 90களில் படு ஃபேமஸான ஹீரோயினாக ஜொலித்தவர் குஷ்பூ. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர் முறைமாமன் படத்தில் நடித்தபோது இயக்குநர் சுந்தர்.சியுடன் ஏற்பட்ட காதல் நீண்ட வருடங்கள் நீடித்தது. பிறகு வீட்டு சம்மதத்துடன் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
அவர்களும் சினிமாவில்: இரண்டு மகள்களும் தங்களது தாய் தந்தை வழியில் சினிமா துறையையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒருவர் துணை இயக்குநராக இருக்கும் சூழலில் இன்னொருவர் நடிகையாகும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சினிமாவிலிருந்து ஒதுங்கிய குஷ்பூ அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார். முதலில் திமுகவில் இணைந்த அவர் அடுத்ததாக காங்கிரஸுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து பாஜகவுக்கு சென்றார்.

சர்ச்சைகள்: குஷ்பூவை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடக்கூடியவர். தமிழ்நாட்டு பெண்களின் கற்பு குறித்து பேசியும் சர்ச்சையில் சிக்கியவர் அவர். இருந்தாலும் அப்போது நிலைமை கைமீறி போனதால் பிறகு மன்னிப்பும் கேட்டார். இப்படி அடிக்கடி தலைப்பு செய்திகளில் வரும் குஷ்பூவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றும் போட்டிருக்கிறார்.
குஷ்பூவின் பதிவு: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனையடுத்து உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள். எனது பகுதி ஸ்டேஷனான E5 போலீஸ் ஸ்டேஷனுக்கும், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரிஷா வீட்டுக்கும்: எங்கள் மீது அக்கறை கொண்டு மெசேஜ் செய்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. இறைவனின் ஆசீர்வாதத்தாலும், ரசிகர்களின் நல்லாசியாலும் நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக இதுபோலவே நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சில நாட்களாக பிரபலங்களின் வீடுகளுக்கு அடிக்கடி இதே மிரட்டல் வருவது கவனிக்க வேண்டிய ஒன்று.


Click it and Unblock the Notifications