அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் ‘மண்டவெட்டி’.. கோமலி பிரசாத் மிரட்ட காத்திருக்கிறார்!
சென்னை: இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அமானுஷ்ய க்ரைம் த்ரில்லரான 'மண்டவெட்டி' திரைப்படத்தில் நடிகை கோமலி பிரசாத், தனது முழுத் திறனை வெளிப்படுத்தி சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பாத்திரத்திற்காக தன்னை உணர்வுபூர்வமாக அர்ப்பணித்து, உடல்ரீதியான மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு பல சவால்களை சந்தித்திருப்பதாக இயக்குநர் பாராட்டியுள்ளார். கோபம், துயரம், மர்மம் நிறைந்த அவரது நடிப்பு படக்குழுவினரையே வியக்க வைத்துள்ளது.
"கோமலி இந்தப் பாத்திரத்தில் நடிக்கவில்லை, மாறாக ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, உடல்ரீதியாகவும் மாறி அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். கடும் சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல்ரீதியாகக் கடினமான தருணங்கள் இருந்தபோதிலும், மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர் நடித்தார்," என்று இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் தெரிவித்தார்.

"இக்கதை, தன்னைவிடப் பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக் குழப்பங்களையும் மையப்படுத்துகிறது. இந்தப் பாத்திரத்தின் பலவீனம், கொந்தளிப்பு, வலி, மற்றும் மீண்டு வரும் மனவலிமை என அனைத்தையும் கோமலி தனது தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்," எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், "அமானுஷ்யக் கதையாக இருந்தாலும், 'மண்டவெட்டி' உணர்வுசார்ந்த உண்மைகளையும் பேசுகிறது. பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீட்டெடுக்க முயலும் ஒரு பெண்ணின் வாழ்வே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்தை கோமலி அற்புதமான நடிப்பால் உயிர்ப்பித்ததை படக்குழுவே வியந்து பாராட்டியது" என்றும் இயக்குநர் தெரிவித்தார்.

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள 'மண்டவெட்டி', பதட்டம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் ஓர் அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். 'செஞ்சி' என்ற சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையுடன், மனதை அதிரவைக்கும் உணர்வுபூர்வமான உலகிற்குள் இத்திரைப்படம் பயணிக்கிறது. இதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications