Kotravai: நான் ஏன் ஆடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டேன்?.. நடிகை கொற்றவை சொன்ன காரணம்!
சென்னை: எழுத்தாளர் மற்றும் நடிகை கொற்றவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஆடை இல்லாமல் எடுத்த, தனது மூன்று புகைப்படங்களை வெளியிட்டு, என் உடல் உங்கள் உடைமையல்ல! என் உடல் என் கணவனுக்கானதுமல்ல! என் உடல் என் இணையருக்கானதுமல்ல! என் உடல் உங்கள் கௌரவத்திற்கானதுமல்ல! என்று கேப்ஷன் இட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவியது.
பலரும் அவரது கேப்ஷனைப் படித்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையே புரிந்து கொள்ளாமல், நடிகை கொற்றவையை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். இப்படியான நிலையில் கொற்றவை அண்மையில் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது பேட்டியில், " நான் வெளியிட்ட புகைபடங்களில் மொத்தம் இரண்டு வகை புகைப்படங்கள் உள்ளது. ஒன்று நிர்வாணமாக அமர்ந்து கொண்டு மேலே பார்க்கும் புகைப்படம், மற்றொன்று பின்புறம் எடுக்கப்பட்ட புகைப்படம். முதல் இரண்டு புகைப்படங்களுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது எடுத்தேன். நான் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால், பரிதவிப்புடன், இயலாமையுடன் பெண்களின் உடலை எப்போதுடா விடுவிப்பீர்கள் என்பதைத்தான் நான் சொல்ல முயற்சி செய்கிறேன். மற்றொரு புகைப்படத்தில் மேலே இருந்து கடவுள் வருவாரா என்று பார்த்துக் கொண்டு இருப்பேன். இவை இரண்டு குறியீடுகளைத்தான் நான் அந்த புகைப்படங்கள் மூலம் சொல்ல வருவது. குறியீடுகள் புரிய வேண்டும் என்றால் கொஞ்சமாவது அறிவு வேண்டும். அது இந்த சமூகத்தில் குறைவாக உள்ளது.

உடலே ஆயுதம்: என் உடலை நான் ஆயுதமாக வைக்கிறேன். இதைத்தான் நான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருந்து சொல்லுகிறேன். காந்தி தனது உடலை ஆயுதமாக வைத்து மேலாடைகளை துறந்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதுவே ஒரு பெண் சட்டையை கழட்டி விட்டால் அதை நிர்வாணம் என்று சொல்வதைத்தான் நான் கேள்விக்கு உட்படுத்த நினைக்கிறேன். இப்போது இந்த புகைப்படங்களை பகிர காரணமே, சமீபத்தில் நடந்த விவாதத்தில் பெண்கள் உடை சார்ந்தும் உடல் சார்ந்தும் இருந்தது.
கோபம்: செய்யும் தொழிலில் அடிப்படையில் ஒருவரை தரக்குறைவாக பார்ப்பது என்பது ஆதிக்க மனநிலை. எனக்குள் இருக்கும் கோபம் என்பது இன்னுமா இந்த சமூகம் உடை மற்றும் உடலில் இருந்து கடக்கவில்லை. பெண்ணின் உடலை பாலியல் பண்டம் என்று இந்த சமூகம் வைக்க வைக்க, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்ற கோபம் வருகிறது. இது எங்கள் உடல், அதை விட்டுவிடுங்கள் என்பதைத்தான் நான் சொல்ல நினைக்கிறேன்.

நிர்வாணம் ஆபாசம் கிடையாது: தனது சட்டையை கழட்டிவிட்டு நடப்பதை அனுமதிக்கும் இந்த சமூகம் பெண் இதைச் செய்தால் ஆபாசம் என்று கூறுகிறது. இந்த சமூகம் பெண்களின் உடலை ஒடுக்குகிறது. நாங்கள் அதை விடுவிக்க போராடுகிறேன், அப்படியென்றால் நாங்கள் எங்களின் உடலைத் தானே முன் வைக்க முடியும்?. இது தொடர்பாக காலம் காலமாக பலர் எழுதுகிறார்கள், அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நான் பெண்களை நோக்கியாவது கேள்வி கேட்கிறேன். உங்கள் நிர்வாணம் உங்களுக்கு ஆபாசமாக நினைக்காதீங்க.
பெண்களுக்கும் ஆண்களுக்கும்: யாராவது உங்களை புகைப்படம் எடுத்து மிரட்டினார்கள் என்றால் கடந்து விடுங்கள். அதேபோல் ஆண்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், நீங்கள் பெண் உடலை பார்ப்பதில் இருந்து கடந்துவிடுங்கள். பெண்களைப் பாருங்கள், ரசியுங்கள், உங்கள் விருப்பத்தை அவர்களிடத்தில் தெரிவியுங்கள், பெண்களுக்கு விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஆனால் இப்படி உடை அணிந்தால் இப்படித்தான் செய்வேன் என்று கூறும் உரிமை உங்களுக்கு கிடையாது என்றுதான் நான் சொல்ல வருகிறேன்" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











