அன்பே சிவம் ஓடல.. சுந்தர் சி 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை!
சென்னை: அன்பே சிவம் படம் ஓடாததால் என் கணவர் இரண்டு வருடம் வீட்டில் உட்கார்ந்து இருந்தார் என்று நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் இப்போ அந்த படத்தை ஆஹா ஓஹோன்னு கொண்டாடுகிறார்கள், அந்த படத்தையெல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது என நடிகை குஷ்பூ அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உள்ளத்தை அள்ளித்தா, உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை தேடி, அருணாச்சலம், தலைநகரம், கலகலப்பு போன்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவருடைய படத்தில் காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் பக்காவாக இருக்கும். சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவைக்கு குறை இருக்காது என்பதால், இவருடைய படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

கமல்ஹாசனின் அன்பே சிவம்: ஆனால், சுந்தர் சி இயக்கிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட படம் தான் அன்பே சிவம். 2003ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில், கமல்ஹாசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் சுந்தர் சி இயக்கிய படமாகும். இப்படத்தில், மாதவன், கிரண், உமா ரியாஸ், சந்தான பாரதி, நாசர், யூகி சேது என பலர் நடித்திருந்தனர். அன்பு தான் கடவுள் என்ற கான்செப்டில் உருவான இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை, வணிக ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது.
அன்பே சிவம் ரீ ரிலீஸ்: சக மனிதன் மீது வைக்கும் அன்பு தான் கடவுள் என்ற அற்புதமான கான்செப்ட் படத்தில் இருந்தாலும், அது அந்த காலகட்டத்தில் எடுபடாமல் போனது, ஆனால், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் இணையத்தில் இந்த படத்தின் வசனத்தை சினிமா பிரியர்கள் கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர். அண்மைக்காலமாக பல படங்கள் ரீ ரிலீஸ் ஆவது போல இந்த படத்தையும் மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
சும்மா இருந்தார்: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை குஷ்பு, அன்பே சிவம் படத்தையெல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் எடுத்த பின் என்னுடைய கணவர் சுந்தர்.சி 2 ஆண்டுகள் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தார். ஆனால் இப்போது அந்த படத்தை ஆஹா ஓஹோன்னு கல்ட் படம் என கொண்டாடுகிறார்கள். இந்த படம் ரிலீஸான சமயத்தில் தியேட்டரில் போய் பார்த்து வெற்றி பெற வைத்திருந்தால் என் கணவர் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஆனால் எது நடந்தாலும் நன்மை என சொல்வோம்.
எல்லாம் நன்மைக்கே: அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த படத்துக்குப் பின் தான் நாங்கள் எங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி கிரியேஷன்ஸை தொடங்கினோம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம். சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்களில் அன்பே சிவம் மிக முக்கியமான படம் அந்த படத்துக்காக அவர் ஒவ்வொரு ஃப்ரேமும் உழைத்தார் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











