ரொம்ப நம்பினேன்.. ஏமாத்திட்டாங்க.. அஜித் படத்தால் வாழ்க்கையே போயிடுச்சு.. நடிகை புலம்பல்
சென்னை: அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனோ சித்ரா. அந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து நீர்பறவை, வீரம், நேற்று இன்று, அந்தமான்,புதிய முகம், ரூம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அழகும் திறமையும் அவருக்கு இருந்தாலும் பெரிதாக சாதிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் மனோ. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகைகள் ரொம்பவே குறைவு. ஸ்ரீதேவி,திரிஷா, சமந்தா உள்ளிட்ட சிலர்தான் அப்படி வென்றிருக்கிறார்கள். மற்றபடி மும்பையிலிருந்தோ, பெங்களூரிலிருந்தோ, கேரளாவிலிருந்தோ வந்து தமிழ் சினிமாவில் வென்ற நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அப்படி தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பிறந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர்தான் நடிகை மனோ சித்ரா. அழகும், திறமையும் நிறையவே இருப்பவர் அவர்.

அவள் பெயர் தமிழரசி: முதன்முதலாக இவர் ஜெய்க்கு ஜோடியாக அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. மீரா கதிரவன் அப்படத்தை இயக்கியிருந்தார். எதிர்பார்ப்பு இல்லாமல் அந்தப் படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக மனோ சித்ராவின் நடிப்புக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டினை தாரளமாக வழங்கினார்கள்.
அடுத்தடுத்த படங்கள்: அவள் பெயர் தமிழரசி படத்துக்கு பிறகு கண்டிப்பாக பெரிய ரவுண்டு வரலாம் என்று மனோ கணக்கு போட்டிருந்தார். அப்படி அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தன. சீனு ராமசாமி இயக்கிய நீர்பறவை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். அந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வீரம், நேற்று இன்று, அந்தமான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மனோ சித்ரா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரம் படத்தில் மனோ: வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்தார் மனோ. சிவா இயக்கிய அந்தப் படம்தான் அஜித்தும், சிவாவும் இணைந்த முதல் படம். அப்படம் மெகா ஹிட் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் மனோவுக்கு எதிர்பார்த்த பெயர் வரவில்லை. ஏனெனில் அதில் அவர் கூட்டத்தில் ஒருவராக வந்து சென்றார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மனோ சித்ரா பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "வீரம் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். அப்போது படத்தில் தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார். அதற்கு பிறகு நீங்கள்தான் அஜித்குமாருக்கு ஜோடி என்று சொன்னார்கள். அதனால் சந்தோஷத்தோடு அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால் அதற்கு பிறகுதான் தெரியும் அவர்கள் என்னிடம் சொன்னது எல்லாம் பொய் என்று. இருந்தாலும் அஜித்துக்காகதான் அந்தப் படத்தில் நடித்தேன். வீரம் படத்தில் நடித்ததால் எனது சினிமா வாழ்க்கையே பாதிப்படைந்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











