Actress Meena: எனக்கு இதுதான் முக்கியம்.. திருமண வதந்திகளுக்கு பதில் கொடுத்த மீனா!
சென்னை: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து சிவாஜி, ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்தார். தொடர்ந்து தமிழில் நாயகியாக அறிமுகமான மீனா, தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார் மீனா. சமீபத்தில் மீனாவின் கணவன் வித்யாசாகர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், சில மாதங்கள் மன உளைச்சலுக்கு உள்ளான மீனா, தற்போது இந்த சோகத்திலிருந்து மீண்டுள்ளார்.
இந்நிலையில் மீனா, இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பிரபல நடிகரை மீனா மறுமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. முன்னதாக இந்த வதந்திகளுக்கு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் பதில் கொடுத்த மீனா, தற்போது பேட்டியொன்றிலும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொள்வதாக மீனா வேதனை தெரிவித்துள்ளார். மறுமணம் குறித்த எந்தவிதமான யோசனையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மீனா: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசனின் படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் தென்னிந்திய மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தமிழில் நாயகியாக அறிமுகமான மீனா, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நாயகியாக நடித்த மீனா, ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜீனியரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கணவரை இழந்த மீனா: இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று வித்யாசாகர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். மீனாவின் சோகத்தில் பங்கேற்றனர். வித்யாசாகரின் மறைவு மீனாவின் வாழ்க்கையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய மகளுடன் அவர் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில் அவரது திரைத்துறை தோழிகள் அவருக்கு தோள் கொடுத்தனர்.
மீனா 40 விழா: மீனா திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்த நிலையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தினர். இந்த நிகழ்ச்சியிலும் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிலையில், மீனாவிற்கு திருமணம் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. நடிகர் தனுஷை அவர் திருமணம் செய்யவுள்ளதாக யூடியூப் பக்கங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முன்னதாக சமூக வலைதளம் மூலம் இந்த வதந்திகளுக்கு மீனா விளக்கம் அளித்த நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள மீனா, மீண்டும் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கணவரை மிஸ் செய்யும் மீனா: தன்னுடைய கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் அவரது இறப்பை ஈடு செய்ய முடியவில்லை என்று மீனா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஹீரோ தனியாக இருந்தால் அவர் குறித்து இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதில்லை என்றும் ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாவதாகவும் இது தன்னை மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் பாதிப்பதாகவும் மீனா குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்னுடைய மறுமணம் குறித்து தான் யோசிக்கவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மகள்தான் முக்கியம்: பெண்களால் தனியாக வாழ முடியும் என்று தெரிவித்துள்ள மீனா, தன்னுடைய எதிர்காலத்தை கணிக்கும் மனநிலையில் தான் இல்லை என்றும் தன்னுடைய வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்வது தனக்கு சரிபட்டு வராது என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு மகள் உள்ள சூழலில் தன்னுடைய மறுமணம் அவரையும் சார்ந்தது என்றும் மீனா தெளிவுப்படுத்தியுள்ளார். தன்னுடைய மகள்தான் தன்னுடைய முழு கவனம் என்று கூறியுள்ள மீனா, தற்போதைக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்த யோசனையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











