நம்மை மீறி யாராலயும் நம்ம மேல கை வைக்க முடியாது.. டி ராஜேந்தர் அப்பா மாதிரி.. நளினி சொன்ன விஷயம்!
சென்னை: நடிகை நளினி 90களில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளவர். அடுத்தடுத்த ஆண்டுகளில் 23 மற்றும் 24 படங்களில் நடித்த ஹீரோயின் என்ற பெருமை நளினிக்கு உண்டு. இந்நிலையில் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசியுள்ள நளினி நம்முடைய விருப்பத்தை மீறி யாரும் நம்மை தொட்டு விட முடியாது என்று தெரிவித்துள்ளார்
தான் சினிமாவில் முன்னணியில் இருந்த காலகட்டத்தில் நடிகர்களிடம் மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் கண்ணியம் நிறைந்திருந்ததாகவும் நளினி தெரிவித்துள்ளார். இயக்குனர் டி ராஜேந்தரின் மூச்சுக்காற்று கூட நடிகைகள் மீது படாது என்று கூறியுள்ள நளினி, அவர் தனக்கு வழிகாட்டி மற்றும் தெய்வம் போன்றவர் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பம் குறித்தும் பல விஷயங்களை நளினி தன்னுடைய பேட்டியில் பகிர்ந்துள்ளார்

நடிகை நளினி: நடிகை நளினி 90களில் மிகப் பிரபலமான மற்றும் பிசியான நடிகையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை நளினி. ஒரு கட்டத்தில் உடன் நடித்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சில ஆண்டுகள் நீடித்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது நளினி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில் சில படங்களிலும் சீரியல்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
விருப்பமில்லாமல் தொட முடியாது: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ள நடிகை நளினி, தற்போது கேரளாவில் வெளியாகியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணை அவரது விருப்பத்தை மீறி யாராலும் தொட்டுவிட முடியாது என்றும் ஒருவர் நம்மிடம் பேசும் போதே அவர்களது கண்களை வைத்து அவர்களது நோக்கம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் என்றும் நளினி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தான் பல படங்களில் நடிப்பதை தவிர்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொந்தரவுகள் இல்லை: ஆனால் தனக்கு பாலியல் தொந்தரவு போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதில்லை என்றும் கூறியுள்ள நளினி இயக்குநர் டி ராஜேந்தர் குறித்தும் பேசியுள்ளார். டி ராஜேந்திரின் உயிருள்ளவரை உஷா படத்தில் நடித்துள்ள நளினி, அவரது மூச்சுக்காற்று கூட நடிகைகளின் மீது படாது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது வழிகாட்டி மற்றும் தெய்வம் போன்றவர் என்றும் கூறியுள்ளார். விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் நளினி தன்னுடைய பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தான் தொடர்ந்து ஒரு மாதம் விஜய்காந்துடன் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கண்கலங்கியதாக நளினி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் செய்த விஷயம்: இதுகுறித்து தெரிந்து கொண்ட விஜயகாந்த், சூட்டிங்கில் இருந்த மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டு நேம், பிளேஸ், திங்ஸ் அனிமல் விளையாட்டை தன்னுடன் விளையாடி தன்னுடைய அழுகையை போக்கியதாகவும் நளினி கூறியுள்ளார். இதனால் தான் அமைதி அடைந்ததாகவும் நளினி கூறியுள்ளார். இதனிடையே அந்த காலகட்டத்தில் நடிகைகளிடையே ஆரோக்கியமான போட்டி இருந்ததாகவும் தங்களால் நடிக்க முடியாத படங்களை மற்ற நடிகைகளுக்கு சிபாரிசு செய்த சம்பவங்கள் நடந்ததாகவும் நளினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











