Nayanthara: என்னுடைய இதயம் தேடிய நபர் அவர்தான்.. நயன்தாரா ஸ்டோரியின் நெட்ஃபிளிக்ஸ் ட்ரெயிலர் ரிலீஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா -இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ம் ஆண்டில் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். சிவப்பு நிற புடவையில் இந்த திருமணத்தில் நயன்தாராவின் காஸ்ட்யூம் அள்ளியது.
இதையடுத்து நெட்பிளிக்சில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் வரும் 18ம் தேதி இந்த ஆவணப்படம் Nayanthara beyond the fairy tale என்ற பெயரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெயிலரை தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கான சிறப்பான முன்னோட்டமாக இந்த ட்ரெயிலர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் மிகச்சிறப்பாக அமைந்து வந்த நிலையில், பாலிவுட்டில் கடந்த ஆண்டில் ஷாருக்கான் -அட்லி காம்பினேஷனில் ரிலீசான ஜவான் படமும் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. தமிழில் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா அடுத்ததாக கவினுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்: நடிகர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்துவந்த நயன்தாரா, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மிகச்சிறப்பாக நடந்த இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தார் நயன்தாரா. திருமணத்தில் இவர் உடுத்தியிருந்த சிவப்பு நிற புடவை மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி, அனைவரையும் அதே போல வாங்கத் தூண்டியது. சிலர் அதே போன்ற காஸ்ட்யூமில் போட்டோஷுட் எடுத்த சம்பவங்களும் நடந்தன.
நெட்ஃபிளிக்சில் நயன்தாரா ஆவணப்படம்: இந்நிலையில் தற்போது நயன்தாராவின் ஆவணப்படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ள இந்த ஆவணப்படம் Nayanthara beyond the fair tale என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தற்போது இதன் ட்ரெயிலரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2.25 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இந்த ட்ரெயிலரில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற ரசிகர்களின் ஆரவாரத்துடன் நயன்தாரா நடந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது படங்களின் கிளிப்புங்குகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
ட்ரெயிலர் வெளியீடு: இதையடுத்து இயக்குநர் அட்லி, நடிகைகள் டாப்சி, ராதிகா, நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் நயன்தாராவின் சிறப்பான குணம் குறித்து பேசுவதாக காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நயன்தாரா பேசுகிறார். தான் எளிதில் மனிதர்களை நம்பி விடுவேன் என்று அவர் கூறுவதாக இந்த ட்ரெயிலரில் காணப்படுகிறது. தன்னை பற்றி பத்திரிகைகளில் வரும் பல விஷயங்கள் தனக்கு புரியாது என்று அவர் கூறுவதாகவும் தொடர்ந்து அவருடைய அம்மா கடவுளும் தானும் மட்டுமே தன்னுடைய மகளை அறிவோம் என்று கூறுவதாகவும் இந்த ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து எந்த விஷயத்தையும் தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று நயன்தாரா மாஸாக பேசுகிறார்.
சிறப்பான ட்ரெயிலர்: தொடர்ந்து விக்னேஷ் சிவனும் இந்த ட்ரெயிலரில் அறிமுகப்படுத்தப்படுகிறார். தன்னுடைய இதயம் மற்றும் ஆத்மா தேடியது அவரைத்தான் என்று நயன்தாரா உருகுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் யாராலும் விக்னேஷ் சிவனைபோல தன்னை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் நயன்தாரா கூறுகிறார். தொடர்ந்து தன்னுடைய திருமணம் குறித்து விக்னேஷ் சிவனும் உற்சாகமாக பேசுகிறார். இதையடுத்து மற்றவர்களின் சந்தோஷத்தை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுவார்கள் என்று தான் நினைத்ததாகவும் இதுபோன்ற ஒரு முயற்சி இதுவரை இல்லாத நிலையில் நெட்பிளிக்சில் தன்னுடைய ஆவணப்படத்தை வெளியிட தான் விரும்பியதாகவும் நயன்தாரா மேலும் கூறியுள்ளார். இந்த ட்ரெயிலர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள நிலையில் நயன்தாராவின் இந்த ஆவணப்படமும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











