பத்மப்ரியாவை ஞாபகம் இருக்கா?.. குழந்தை இல்லை.. விட்டுக்கொடுக்கணும்.. உருக்கத்துடன் மனம் திறந்த நடிகை
சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் பத்மப்ரியா. பட்டியல், தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, தங்க மீன்கள் என பல படங்களில் நடித்த அவர்; சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தவர். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். அதற்கேற்றபடிதான் அவரது கிராஃப் அமைந்திருந்தாலும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.
டெல்லியில் பிறந்தவர் பத்மப்ரியா. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை செகந்திராபாத்தில் முடித்தார். வணிகவியல் பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும் அவருக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனையடுத்து தொடர்ந்து தெலுங்கு சினிமாக்களில் முயற்சி செய்ய ஆரம்பித்த அவர்; 2004ஆம் ஆண்டு வெளியான சீனு வசந்தி லட்சுமி என்கிற டோலிவுட் படத்தில் அறிமுகமானார். படம் ஓரளவுக்கு அவருக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகளும் வரிசையாக வர ஆரம்பித்து பிஸியான நடிகையாக கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தார் அவர்.
உடனே மலையாளத்தில் அறிமுகம்: தெலுங்கில் அறிமுகமான முதல் படம் அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்ததன் காரணமாக உடனடியாக அவருக்கு மலையாள திரையுலகிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி காழ்ச்சா என்ற மலையாள படத்தில் நடித்த அவர் தொடர்ந்து அம்ருதம் என்ற மலையாள படத்திலும் நடித்தார். கரியரில் அறிமுகமான ஒரே வருடத்தில் இரண்டு மொழிகளில் நடித்த பெருமையையும் பெற்றார் அவர். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே மற்ற மொழிகளிலும் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

தமிழில் பிஸி: அந்தவகையில் தமிழில் அவர் தவமாய் தவமிருந்து படத்தில் கரியரை தொடங்கினார். சேரன் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குடும்பங்கள் அனைத்தும் படத்தை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். பத்மப்ரியாவும் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். எனவே அவர் தமிழில் கொஞ்சம் பிஸியாக ஆரம்பித்தார். அதன்படி பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், தங்க மீன்கள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; மலையாளத்தில்தான் படு பிஸியாக இருந்தார். அங்கு வரிசையாக நடித்துகொண்டே இருந்தார் அவர்.
குறைந்த வாய்ப்புகள்: திறமையும் அழகும் இருக்கும் நடிகை என்ற பெயரை பெற்றதால் கண்டிப்பாக தமிழ், மலையாள திரையுலகில் நீண்ட வருடங்களுக்கு அவர் நிலைத்து நிற்பார் என்றே திரை வல்லுநர்கள் கணித்திருந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அவரும் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இத்தனை நாட்கள் அவர் எங்கிருக்கிறார் என்று ரசிகர்கள் தேடிக்கொண்டிருந்த நிலையில்; சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை மற்றும் கரியர் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
பத்மப்ரியா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சினிமாவில் என்னை ஏன் பார்க்க முடியவில்லை என்று பலர் கேட்கிறார்கள். 2014 - 2015ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவிலிருந்து நான் ஒரு பிரேக் எடுத்துவிட்டேன். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் அந்த முடிவை நான் எடுத்தேன். இருந்தாலும் சினிமாவை நான் முழுவதுமாக விடவில்லை. படிப்புக்காக அப்படி செய்தேன். திருமணம் செய்துகொள்வேன் என்று நான் நினைத்ததே இல்லை. எனது வாழ்க்கை துணையை நான் அங்குதான் முதன்முதலாக சந்தித்தேன். முதலில் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். முதல் டேட் செய்யும்போது எங்களுக்கு நாங்கள் பொருத்தமாக இருப்போம் என்பதை இரண்டு பேருமே உணர்ந்துகொண்டோம்.இருப்பினும் ஒரு வருடம் கழித்துதான் நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் ஆகும்போது நான் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

வாழ வேண்டும் என்று எனக்கு தோன்றியது: அந்த சமயத்திலேயே நான் தமிழ், மலையாளம், ஹிந்தியில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருந்தபோது நமது வாழ்க்கையை நாம் எப்போது வாழப்போகிறோம் என்று தோன்றியது. நிறைய நடிகர்கள் அவர்களது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே பிரேக் எடுத்திருந்ததும் எனக்கு தெரியும். அந்த பிரேக்தான் நமது நடிப்பை வளர்ப்பதற்கு உதவும். முப்பது வயதை கடந்து நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நடிகைகளுக்கு அப்படியில்லையே. இருப்பினும் இனி வரக்கூடிய காலங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருக்கிறது. நிறைய நிறைய நல்ல படங்களை நான் செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
நல்ல படங்கள் நான் செய்திருக்கிறேன்: நான் எனது கரியரில் நல்ல படங்கள் செய்திருக்கிறேன். தவமாய் தவமிருந்து வசந்தியாகட்டும், பட்டியல் பட கேரக்டர் சரோ ஆகட்டும், சத்தம் போடாதே, பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என அந்த்ப் பட்டியல் இருக்கிறது. நான் அடிப்பையில் ஒரு டான்ஸர்தான். ஆனால் என்னுடைய நடன திறமையை காட்டும்படியான எந்த ரோலும் இதுவரை எனக்கு அமையவே இல்லை. இனி அதுமாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். பழசிராஜாவில் களரி செய்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட கதைகள் கொண்ட இயக்குநர்கள் யாராக இருந்தாலும் தாராளமாக என்னை தொடர்புகொள்ளலாம். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.
நினைத்துக்கொண்டெல்லாம் இருக்கமாட்டேன்: சினிமாவில் வரும் ஏற்ற, இறக்கங்கள் பற்றியெல்லாம் பெரிதாக நான் நினைக்கமாட்டேன். ஆனால் சினிமாவில் நான் தாழ்ந்து இருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு தெரியும். ஏழு மாதங்களுக்கு முன்புதான் நான் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். எனவே அதற்கான வேலைகளையும் நான் பார்க்க தொடங்கியிருக்கிறேன். அதேபோல் என் மன ஓட்டத்துக்கு ஒத்துப்போகும் எழுத்தாளர்களுடனும் நான் டச்சில்தான் இருக்கிறேன். ஒரு பெரிய ஏற்றத்துக்கு செல்லுமோது கண்டிப்பாக இறக்கமும் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திருமணமே செய்யமாட்டேன் என்று நினைத்திருந்த பெண் நான். ஆனால் திருமணம் செய்துகொண்டேன்.
எனக்கு குழந்தை இல்லை: எனக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை. நாங்கள் இன்னமும் பெற்றோர் ஆகவில்லை. திருமணத்தை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கணவர் பெயர் ஜாஸ்மின் ஷா. நான் கடினமாக உழைக்கும்போது என்னுடைய கணவர்தான் எனக்காக உதவுவார்.எதையுமே நான் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன். வதந்திகள் என்பது இந்திய சமூகத்தில் ஒரு ட்ரேட்மார்க். அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திட வேண்டும். எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள். என்னுடைய படத்தை விட்டால் அதிகபட்சமாக எனக்கு குழந்தை இருக்கிறது என்றுதான் எழுதுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











