Pooja hegde :தொடர் தோல்விக்கு கதைத்தேர்வுதான் காரணமா.. மனம்திறந்த பூஜா ஹெக்டே!
ஐதராபாத் : நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் அல்லு அர்ஜுனுடன் பூஜா நடித்திருந்த அலா வைகுந்தபுரமுலு படம்தான் பூஜாவின் கடைசி வெற்றிப்படம்.
இதையடுத்து தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துவருகிறார் பூஜா ஹெக்டே. இதற்கு இவரது கதைத்தேர்வுதான் காரணமா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

தோல்விகள் குறித்து பேசிய பூஜா ஹெக்டே : நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து இங்கு படவாய்ப்புகள் அமையாத நிலையில், தெலுங்குப் படவுலகம் அவரை அள்ளி அணைத்துக் கொண்டது. தொடர்ந்து அவருக்கு சிறப்பான படங்கள் அமைந்தன. கடந்த 2020ம் ஆண்டில் அல்லு அர்ஜுனுடன் பூஜா ஹெக்டே நடித்து வெளியான அலா வைகுந்தபுரமுலு அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி 6 படங்களில் நடித்து முடித்துள்ளார் பூஜா ஹெக்டே. Most eligible Bachelor, ராத ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா, சர்கஸ் மற்றும் சமீபத்தில் சல்மானுடன் நடித்துள்ள கிசி கி பாய் கிசி கி ஜான் என அடுத்தடுத்த படங்கள் பூஜாவிற்கு தோல்வியை கொடுத்துள்ளன. இதனால் பூஜா ஹெக்டேவின் கதைத்தேர்வு சொதப்பலாக இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
சல்மானுடன் கிசி கி பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ள பூஜா, அந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். இதன்மூலம் பாலிவுட்டில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் காத்திருந்தார். தமிழில் சூப்பர் ஹிட்டடித்த வீரம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியானது. ஆனால் இந்தப் படம் இந்தி ரசிகர்களை கவரத் தவறியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் சொதப்பலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கதைத்தேர்வுதான் பூஜாவின் தோல்விப் படங்களுக்கு காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பேட்டியொன்றில் பதிலளித்துள்ள பூஜா ஹெக்டே, காட்டம் காண்பித்துள்ளார். தான் ஒன்றும் பெரிய சினிமா பின்னணியில் இருந்து நடிக்க வரவில்லை என்றும் அதனால் தினந்தோறும் தனக்கு 20 கதைகள் தேடி வராது என்றும் கூறியுள்ளார். மாறாக தான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து நடிக்க வந்துள்ளதாகவும் அதனால் தன்னை தேடி வரும் கதைகளை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. விஜய் -நெல்சன் காம்பினேஷனில் வெளியான இந்தப் படத்திற்கும் மிகவும் அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால் இந்தப் படமும் சொதப்பியது. ஆனாலும் படத்தின் பாடல்களில் விஜய்க்கு ஈடுகொடுத்து சிறப்பான நடனங்களை கொடுத்திருந்தார். பான் இந்தியா நாயகியாகவும் இவர் மாறியுள்ள நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் தற்போது துவண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











