குண்டூர் காரம் பட இயக்குநர் த்ரி விக்ரம் மீது குற்றச்சாட்டு.. தமிழ்ப்பட நடிகை எக்ஸ் தள பக்கத்தில் பகீர்!
சென்னை: தமிழில் நெஞ்சிருக்கும்வரை படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் பூனம கவுர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், தற்போது குண்டூர் காரம் பட இயக்குநர்மீது புகார் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தெலுங்கு திரைப்பட சங்கத்தினர் முன்னதாகவே தன்னுடைய புகாரை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான குண்டூர் காரம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தின் பாடல் ஒன்று, ரசிகர்களுக்கு மிகப்பெரிய வைபை கொடுத்திருந்தது. இந்நிலையில் இவர் மீது நடிகை பூனம் கவுர், பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை பூனம் கவுர்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை பூனம் கவுர். தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், பயணம், என் வழி தனிவழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தற்போது ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் மற்றும் இயக்குநர் த்ரி வி6க்ரம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர்மீது புகார்களை கொடுத்திருந்தார். இவை அப்போது மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றிருந்தன. சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.
த்ரிவிக்ரம் மீதான புகார்: இந்நிலையில் தற்போது தெலுங்கில் ஜானி மாஸ்டர் மீது எழுந்துள்ள பாலியல் புகாரையடுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பேசியுள்ள பூனம் கவுர், ஜானியை இனிமேல் மாஸ்டர் என்று அழைக்கக்கூடாது என்றும் மாஸ்டர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதனிடையே, த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் குறித்த தன்னுடைய முந்தைய புகாரை தெலுங்கு நடிகர் சங்கம் தீவிரமாக எடுததுக் கெள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள பூனம் கவுர், அப்படி நடந்திருந்தால் தானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

ஆதரவு கிடைக்கவில்லை: மேலும் தான் அமைதியாக புறக்கணிக்கப்பட்டதாகவும் அப்போது தலைவர்களாக செயல்பட்ட யாரிடமும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். திரையுலகத்தில் உள்ள பெரியவர்கள் இயக்குநர் த்ரிவிக்ரமிடம் இந்த விஷயத்தில் தற்போது கேள்வி எழுப்புமாறும் பூனம் கவுர் தன்னுடைய பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார். நீண்ட காலங்களாகவே இந்த புகார்களை இந்த பஞ்சாப் அழகி முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு திரைப்பட சங்க தலைவர் மஞ்சு விஷ்ணு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வை கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்னமாதிரியான புகார்?: திரிவிக்ரம் மீதான புகாரை மட்டும் கூறியுள்ள பூனம் கவுர், அதுகுறித்து விவரமாக பேசவில்லை. இந்நிலையில் முன்னதாக திரிவிக்ரம் குறித்து தன்னுடைய பதிவில் தன்னுடைய பல பிரச்சினைகளுக்கு த்ரி விக்ரம்தான் காரணம் என்று கூறியிருந்தார். அவர் ஒரு சூழ்ச்சியாளர் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது த்ரிவிக்ரமிடம் விசாரிக்க கோரும் பூனம் கவுரின் இந்த கோரிக்கையை தெலுங்கு திரைப்பட சங்கம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











