கோவில் கோவிலாக போகும் பிரியா ஆனந்த்.. அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?
திருப்பதி: தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தனர்.
அழகான க்யூட்டான நடிகை பிரியா ஆனந்த், பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், தனக்கான சரியான அங்கிகாரம் கிடைக்காமல் அந்த இடத்தை பிடிக்க போராடி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியா ஆனந்த், பள்ளிப்படிப்புக்கு பின்னர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ் பெற்ற அல்பெனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பு படித்தார். ஊடகத்துறையில் பணியாற்ற விரும்பிய பிரியா, நான் ஒரு நடிகையாக திரைத்துறையில் காலடி எடுத்துவைப்பேன் என கனவிலும் நினைத்துப்பார்க்க வில்லை என்று பல முறை கூறியுள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த்: படிப்பை முடித்து 2008ம் ஆண்டு சென்னை திரும்பிய பிரியா மாடலிங் துறையில் தனது தடத்தை பதித்தார். மாடலிங் துறை அவரை சிவப்பு கம்பளம் விரிந்து வரவேற்றதால் பல பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். விளம்பரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதால், இதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா துறையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஜெய்யுடன் இணைந்து வாமனன் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து புகைப்படம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த இரு படங்களும் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இதையடுத்து, சித்தார்த்திற்கு ஜோடியாக நூற்றெண்பது படத்தில் நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற்று அனைவருக்கும் தெறிந்த முகமானார் பிரியா ஆனந்த்.
லியோ படத்தில்: அதன் பின் எதிர்நீச்சல் படத்தில் உண்மையில் எதிர் நீச்சல் போட்டது என்னமோ நம்ம பிரியா ஆனந்த் தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியா, தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்து இருப்பார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற மின்வெட்டு நாளில் என்ற பாடல் மெகா ஹிட்டாகி அவரை அடுத்த வெற்றிக்கு அழைத்து சென்றது. அதன்பின் வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊருல இரண்டு ராஜாகுமாரி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காள தேசம், இந்தி, மராத்தி அனைத்து மொழிகளிலும் புகுந்து விளையாடும் வருகிறார் பிரியா ஆனந்த். கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

திருப்பதியில் சாமி தரிசனம்: தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர், கோவில் வளாகத்தில் இருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செல்பி எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நேற்று பிரியா ஆனந்த் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது யானை முன் அவர் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ இணையத்தில் டிரெண்டானது. நேற்று திருச்செந்தூர், இன்று திருப்பதி என கோவில் கோவிலாக சுற்றி வரும் பிரியா ஆனந்திற்கு அப்படி என்ன வேண்டுதல் இருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











