Vijayakanth - அப்போக்கூட அவரை பார்க்க முடியல.. கேப்டன் விஜயகாந்த்தை நினைத்து மனம் உருகிய நடிகை
சென்னை: உடல்நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது நினைவிடத்துக்கு வந்து தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதாவும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை. அதுமட்டுமின்றி பலருக்கும் விஜயகாந்த் பல உதவிகளை செய்திருக்கிறார்.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
நடிக்க மறுத்த கதாநாயகிகள்: விஜயகாந்த் வளர்ந்துவந்த நேரத்தில் அவரது நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளவில்லை கேப்டன். மாறாக திறமையை வளர்த்து வெற்றியை பெற்றால் ஒதுக்கியவர்களும் வருவார்கள் என்ற கோட்பாட்டின்படி இயங்கி; தன்னை ஒதுக்கியவர்களையே மீண்டும் தன்னுடன் நடிக்கும்படி செய்தார்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார்.
உயிரிழப்பு: இந்த சூழலில் கடந்த மாதம் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நினைவிடத்தில் மரியாதை: விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் விஜயகாந்த்துடன் அம்மன் கோயில் கிழக்காலே, மீனாட்சி திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் நடித்த ராதா விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜயகாந்த்தை நான் முதன்முதலில் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பின்போது நேரில் சந்தித்தேன். அவரது பிறந்தநாளின்போது பிரேமலதாவிடம் ஃபோனில் பேசுவேன். எனது மகளின் கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கப்போகும்போது அவரை பார்க்க முடியவில்லை. பிரேமலதாவிடம்தான் கொடுத்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் எனது மகள் திருமணத்துக்கு முதல் நாளே வந்து பார்த்துட்டு போனார் பிரேமலதா. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக அவருடைய ஆசீர்வாதத்துடன் வந்திருப்பார்.
அது எனக்கு ரொம்ப பெரிய விஷயம். இந்த மாதிரி இடத்தில் அவரை இப்படி பார்ப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. அவர் ரொம்ப நல்லவர். நல்லது செய்திருக்கிறார். அதெல்லாம் நம் கூடவே இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications