வரலட்சுமி சரத்குமாருக்கு இந்த பிரச்சினை நடந்தது.. சுடுதண்ணிய ஊத்தினேன்.. ராதிகா சரத்குமார் காட்டம்!
சென்னை: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்மா கமிட்டியில் இடம்பெற்றிருந்த தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தை தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று மோகன்லால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விஷயத்தில் முன்னணி நடிகைகள், நடிகர்கள் என அனைவருமே குரல் கொடுத்து வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல்களில் நடந்த பல்வேறு அவலங்களும் தற்போது வெளிப்பட்டு வருகிறது. நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டில் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், இந்த விஷயத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்து இந்த விஷயத்தை விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அறிக்கையின் முடிவுகள் எதுவும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிலும் பிரச்சினை: பாலிவுட், டோலிவுட் என திரைத்துறையில் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. சமந்தா, குஷ்பூ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த விஷயத்தில் பல்வேறு கேள்விகளையும் கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் நடிகை ராதிகாவும் பல விஷயங்களை பேசியுள்ளார். கேரளாவில் இந்த விஷயம் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் வெளிவந்துள்ளதாகவும் ஆனால் தமிழிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தீர்வு எட்டப்பட வேண்டுமானால் அனைவரும் அமர்ந்து பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தைரியமாக குரல் கொடுத்த வரலட்சுமி: சினிமாவில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அனைத்து பெண்களும் தைரியமானவர்கள் கிடையாது என்பதை சுட்டிக் காட்டியுள்ள ராதிகா, ஆனால் அவர்கள் மிகவும் வலிமையாக இந்த விஷயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தான் சினிமாவில் என்ட்ரி ஆன போது, அப்பாவித்தனமாக இருந்ததாகவும் ஆனால், இத்தகைய பிரச்சினைகளை சந்தித்தபோது, அதிலிருந்து வெளிவரும் தைரியத்தை வளர்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இந்த பிரச்சினையை சந்தித்ததாகவும் தைரியமாக குரல் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார் ராதிகா.
சுடுதண்ணீரை ஊற்றினேன்: கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்படுவதாகவும் தான் பலமுறை செக் செய்த பிறகே கேரவனில் ஏறுவேன் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார். திருப்பதியில் தன்னுடைய தோழியான ஒரு நடிகைக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதாகவும் கேரவனில் குளித்துக் கொண்டிருந்த அவரை ஜன்னல் மூலம் பார்க்க முயன்ற நபர்மீது தான் பக்கத்தில் இருந்த சுடுதண்ணீரை ஊற்றியதாகவும் ராதிகா கூறியுள்ளார். சீனியர் நடிகர்கள் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது குறித்து தனக்கு ஆதாரப்பூர்வமாக தெரியும் என்றும் அதை தான் தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இளம் நடிகர்கள் அப்படி இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











