கல்யாணமாயிட்டா இப்படி கேள்வி கேட்பீங்களா? கடுப்பான ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சொல்வீர்களா? என ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ரகுல் ப்ரீத் சிங் கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில், கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அதேபோல் என் ஜி கே படத்திலும் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காதல் திருமணம்: பான் இந்தியா நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவரின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் நடைபெற்ற இந்த திருமணத்தில், பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், டேவிட் தவாண், ஷாகித் கபூர் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.
திருமணம் இயல்பான விஷயம்: இந்நிலையில் ஆடை வடிவடைப்பு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத்திடம், திருமண வாழ்க்கை பற்றியும், திருமதியான பிறகு உடை அணிவதில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது பேசிய இவர், நமது இந்திய சமுதாயத்தில் திருமணம் பற்றி மிகப்பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் மிக இயல்பான விஷயமாக திருமணத்தைப் பார்க்க வேண்டும்.
ஆணுக்கு கட்டுப்பாடு இருக்கா: திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று எதாவது கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இருக்கிறதா? அப்படி இருக்கும் போது பெண்களிடம் மட்டும் அதை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? காலம் மாறிவிட்டது. அனைவருக்கும் என்ன பிடிக்கிறதோ அதை செய்கிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நானும் என் கணவரும், 90 சதவீதம் ஒத்துப் போகிறோம். அதனால், எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எங்கள் காதல் வாழ்க்கை எப்படி சந்தோஷமாக சென்றதோ, திருமண வாழ்க்கையும் அப்படி எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக செல்கிறது என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











