Rambha: சினிமாவில் இருந்து விலக இது தான் காரணம்.. நடிகை ரம்பா மனம் திறந்த பேட்டி!
சென்னை: 90 காலகட்டத்தில் புகழ் பெற்ற நடிகைகள் வரிசையில் இருந்தவர் தான் நடிகை ரம்பா. சினிமாவில் மீண்டும் என்ட்ரியாகி இருக்கும் இவர், சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
அழகிய லைலா... அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டால் இன்றைய காலத்து இளசுகளும் துள்ளி குதித்து ஆட்டம் போடுவார்கள். அப்படி 90 காலகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரம்பா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி , மலையாளம் மற்றும் கன்னடம் தவிர, பெங்காலி, போஜ்புரி என எட்டு மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்பா முதலில் அறிமுகமானது என்னமோ மலையாள திரைப்படத்தில் தான். அதன் பின் பிரபுவுடன் சேர்ந்து உழவன் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் நடித்தார். நகைச்சுவை திரைப்படமான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். அதன் பின் ரஜினி, கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.

நடிகை ரம்பா: பல திரைப்படத்தில் அடுத்தடுத்து நடித்து வந்த நடிகை ரம்பா, 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ரம்பா. அவ்வப்போது மட்டும், இந்தியா பக்கம் வந்து சென்றார். தற்போது ரம்பா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அண்மையில் இவர், சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறி உள்ளார்.

இதுதான் காரணம்: இதில், திருமணமானதும் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் வந்துவிட்டது. அதோடு குழந்தைகள் பிறந்துவிட்டதால், அவர்களை வளர்க்க வேண்டிய கடமையும் எனக்கு வந்துவிட்டது. அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்கு சென்றால், அந்த குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்ள முடியாது. என் கணவர் ஒய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் குழந்தைகளுடன் நான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, சினிமாவை விட்டு விலகினேன். ஆனால், இப்போது, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களுடைய வேலையை அவர்களே செய்து கொள்கிறார்கள். இதனால், மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். மீண்டும் நடிப்பது குறித்து கணவரிடம் கேட்ட போது, அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால், சினிமா தான் என்னுடைய முதல் காதல் என்பது என் கணவருக்கு தெரியும். பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், இப்போது வரைக்கும் எனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வம் குறையவே இல்லை.
நான் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன் என்னைப்பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இத்தனை ஆண்டு சினிமாவில் இல்லாத போதும் என் மீது இத்தனை அன்பா என நினைத்து வியந்து போனேன். அதுவும் நான் சினிமாவில் நடிக்க வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்றார் நடிகை ரம்பா.


Click it and Unblock the Notifications











