எல்லாம் சரியா இருக்கு.. மீண்டும் பரபரப்பாக இருக்கும் நடிகை ரம்யா.. ஒரு பக்கம் புகையுதே!
பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் ஜூன் 3 அன்று பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் முக்கிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இனிவரும் இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி எப்படி இருக்கும், மக்கள் மத்தியில் அவர் இடம்பிடிப்பாரா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான பதில்கள் காலப்போக்கில் தான் வெளிப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டி.கே. சிவக்குமார் முதல்வரானதைத் தொடர்ந்து, கர்நாடக அரசியலில் பல புதிய கணக்குகள் போடப்பட்டு வருகின்றன. அவரது பதவியேற்பு விழா மற்றும் அவருக்கு நெருங்கிய சகாக்கள் குறித்த பல்வேறு தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வரிசையில் பிரபல நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யாவின் பெயரும் மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான ரம்யா, கர்நாடக அரசியலுக்கு மீண்டும் வருவாரா அல்லது சிவக்குமாரால் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகள் தற்போது வலுத்துள்ளன.

ரம்யாவுக்கு சாதகம்: இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கணிப்பதாவது, "முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ரம்யாவுக்கு கட்சியில் அல்லது ஆட்சியில் ஒரு முக்கியப் பொறுப்பை வழங்கக்கூடும். கர்நாடக காங்கிரஸில் தற்போது செல்வாக்குள்ள, பிரபலமான இளம் பெண் தலைவர் இல்லாதது ஒரு பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ரம்யாவின் ஆளுமை பெண்களைக் காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் ஒரு வலுவான ஆயுதமாக அமையும் என்பதால், அவரது அரசியல் மறுபிரவேசம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
மாநில அரசியல்: அதுமட்டுமன்றி, பழைய மைசூரு பகுதிகளில் ரம்யா ஒரு சக்திவாய்ந்த தலைவராக உருவெடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. மாண்டியா, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அவருக்குப் பலமான மக்கள் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ரம்யா மாநில அரசியலில் தீவிரமாகப் பங்கெடுத்தால், இந்தப் பகுதிகளில் கட்சியின் பலம் பலமடங்கு அதிகரிக்கும். இதன் காரணமாகவே, வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு டி.கே. சிவக்குமார் இப்போதே ரம்யாவை தீவிர அரசியலில் களமிறக்க வாய்ப்பிருக்கிறது" என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.

புகைச்சல்: இப்படி ரம்யா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அவரது பெயர் அடிபடுவது குறித்தும் பேச்சுக்கள் எழுகின்றன. இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டபோது, "தற்போது அப்படி எந்தவொரு முடிவும் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் கனிய வேண்டும்" என்று அவர் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். ரம்யாவின் இந்த கருத்து கர்நாடக அரசியல் வட்டாரத்தில் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அதற்கும் கர்நாடக காங்கிரஸில் இருக்கும் சினிமா பின்னணி கொண்ட பெண் அரசியல்வாதி முக்கிய காரணமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications