ஜாக்கெட்டுக்குள் தங்கம் கடத்தல்..அதிர்ச்சி கிளப்பிய தமிழ் பட நடிகை..அவர் அப்பா என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு நடித்த திரைப்படம் வாகா. இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்திருந்தார். இவர் கர்நாடகத்தை மாநிலத்தை சேர்ந்தவர். கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து பெங்களூருவுக்கு வந்தபோது தனது ஜாக்கெட்டில் வைத்து 15 கிலோ தங்கத்தை கடத்திவந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக கைது செய்தார்கள். இந்தச் சூழலில் அவரது தந்தை ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரா ராவ் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் கடந்த 2014ஆம் ஆண்டு நான் ஈ புகழ் கிச்சா சுதீப் இயக்கிய மாணிக்யா திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இருந்தாலும் ரன்யா ராவின் அழகும், நடிப்பும் அந்த மொழி திரையுலக இயக்குநர்களை மட்டுமின்றி தமிழ் திரைப்பட இயக்குநரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது என சொல்லலாம்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடி: அந்தவகையில் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய ஜி.என்.ஆர். குமரவேலன் வாகா திரைப்படத்தை விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கினார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்தார். படம் பெரிதாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து கன்னடத்துக்கு சென்ற ரன்யா அங்கு பட்டாக்கி படத்தி நடித்தார். அந்தப் படமும் அவருக்கு பெரிய திருப்புமுனையை எதுவும் கொடுக்கவில்லை. அவர் நடித்த மூன்று படங்களுமே தோல்வியடைந்ததால் ரன்யாவால் திரைத்துறையில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற முடியவில்லை.

தங்கம் கடத்தல்: சூழல் இப்படி இருக்க கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டுக்கு வராதவர் இப்போது வந்திருக்கிறார். அதாவது துபாயிலிருந்து சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார் ரன்யா ராவ். அப்போது காவலர் ஒருவர் உதவியுடன் விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளிலிருந்து நழுவி செல்ல பார்த்திருக்கிறார். அதனை கவனித்து சந்தேகப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ரன்யாவை அழைத்து தீவிரமாக சோதனை செய்தார்கள்.
உச்சக்கட்ட அதிர்ச்சி: ரன்யாவை சோதனை செய்த அதிகாரிகளுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் தனது ஜாக்கெட்டுக்குள் மொத்தம் 15 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி லாவல்லி சாலையில் இருக்கும் ரன்யாவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தபோது கிலோ கணக்கில் தங்க நகைகள், இரண்டு கோடி ரூபாய்வரை ரொக்க பணம் இருந்தன. அதனை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐபிஎஸ் மகள்: இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர் ஐபிஎஸ் அதிகாரி ராமசந்திரா ராவின் மகள் ஆவார். அதாவது ராமசந்திரா மொத்தம் இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறார். இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்தவர்தான் ரன்யா ராவ். ரன்யா ராவை ராமசந்திரா தனது வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்த செல்வாக்குதான் அவரை தவறான காரியத்தை செய்ய வைத்திருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்தன.
ராமசந்திரா ராவின் விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரன்யாவின் தந்தை ராமசந்திரா அளித்த விளக்கத்தில், "இந்தச் சம்பவத்தை நான் ஊடகங்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவள் எங்களுடன் வாழவில்லை. கணவரிடமிருந்தும் பிரிந்துவிட்டாள். ஏதோ குடும்ப பிரச்னையாக இருக்கும். சட்டம் தன் கடமையை செய்யும். எனது சர்வீஸில் எந்த ஒரு கரும்புள்ளியையும் நான் வாங்கியதில்லை. இதுகுறித்து நான் மேலும் எதுவும் பேச விரும்பவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











