Exclusive : 'ஆமாம் மஹி என் சொந்த மகள் தான்'... மனம் திறக்கும் நடிகை ரேவதி!
டெஸ்ட் டியூப் பேபி விவகாரம் குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி, கமல் என 80களின் முன்னணி நாயகர்கள் அனைவருடன் நடித்து, முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. புதுமைப் பெண், மகளிர் மட்டும், மண்வாசனை என அந்த காலத்திலேயே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து, பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றவர்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து வரும் இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரை பற்றியும், இவரது மகள் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
இவற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை ரேவதி ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

டெஸ்ட் டியூப் பேபி
மஹி தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என எல்லாரும் நினைத்தார்கள். இல்லை அவள் என் பிள்ளை தான் என விளக்குவதற்காக தான் நான் இந்த விஷயத்தை வெளியே சொன்னேன். டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சாதாரண விஷயம். அதில் ஒன்றும் புதுமை ஏதும் இல்லை.

எனக்காக ஒரு குழந்தை
கணவருடன் விவாகரத்துப் பெற்ற பிறகு, எனக்காக ஒரு குழந்தை வேண்டும் என நினைத்தேன். நன்கு யோசித்து முடிவெடுத்து, டெஸ்ட்டியூப் முறையில் மகள் மஹியைப் பெற்றெடுத்தேன்.

அதிகம் பேச விரும்பவில்லை
மஹியை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அவள் ஒன்றும் ஸ்பெஷல் சைல்ட் இல்லை. அவளும் ஒரு சாதாரண குழந்தை தான். எல்லா குழந்தைகளையும் போல் தான் அவளும் வளர்கிறாள்.

பெற்றோர்கள் உறுதுணை
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய விஷயம் தான். நான் எனது பெற்றோருடன் இருப்பதால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நான் விரும்பிய போது, அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து, எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

நான் மகிழ்ச்சியா இருக்கிறேன்
நான் தற்போது படங்களில் நடிக்கவில்லை. சன்டிவியில் வரும் அழகு சீரியலில் மட்டும் தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இவ்வாறு நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications