Actress Samantha: சினிமாவில் கேப் எடுத்துக் கொண்டது நல்ல முடிவுதான்.. சமந்தா ஓபன்!
சென்னை:நடிகை சமந்தா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தன்னுடைய கேரியரை பாதிக்காத வண்ணம் அவர் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோயான மயோசிட்டிஸ் காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி தன்னுடைய சிகிச்சை உள்ளிட்டவற்றிற்காக நேரத்தை ஒதுக்கி வந்தார். அவரை சில ஆன்மீகப் பயணங்களிலும் காண முடிந்தது.
இந்நிலையில் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த சமந்தா திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடித்திருந்த குஷி படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இதனிடையே அடுத்ததாக சிட்டாடல் இந்திய பதிப்பிலும் சமந்தா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. படத்தை முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிஸியாக காணப்படுகிறார். தமிழில் பானா காத்தாடி மூலம் என்ட்ரி கொடுத்த சமந்தா, அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவு மற்றும் அரிய வகை நோய் பாதிப்பு ஆகியவற்றால் அடுத்தடுத்து சமந்தாவின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டது.
சினிமாவில் பிரேக்: இவற்றிலிருந்து வெளிவரும் வகையில் கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதிலிருந்து கேப் எடுத்துக்கொண்டார் சமந்தா. இந்த சமயத்தில் மனதளவிலும் உடலளவிலும் தன்னை சிறப்பாக்கிக் கொள்ள தான் முயன்றதாக சமந்தா தற்போது தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல் நலனை சிறப்பாக மாற்றிக் கொள்வதற்காக சினிமாவில் இருந்து விலகியது சரியான முடிவுதான் என்று அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிப்பில் பிசியாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டதை சிறப்பான முடிவாகவே தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சரியான முடிவு தான்: இந்த முடிவு கடினமானதாக இருந்தாலும் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகவே இதை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுய வெறுப்பு, தன்னம்பிக்கை இழந்திருந்த தன்னை செதுக்கி கொள்வதற்கான நேரமாகவும் அது அமைந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வரும் தனக்கு இந்த இடைவெளி தேவைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகையாக இருப்பதால் சில நேரங்களில் தனது உலகம் மிகவும் சிறியதாகவும் சுயநல கூட்டம் நிறைந்ததாகவும் இருந்ததாக கூறியுள்ள சமந்தா, தன்னை சுற்றியுள்ளவர்கள் உண்மையை கூற மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மாறியுள்ள மனநிலை: தற்போது இந்த இடைவெளி காரணமாக விமர்சனங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு நடிகையாக இது தனக்கு மிகவும் அவசியம் என்றும் சமந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார். சில நேரங்களில் இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளதாகவும் பல நேரங்களில் அவர்களை ப்ளாக் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு நெகட்டிவிட்டி எப்போதுமே பிடிக்காது என்றும் ஆனால் வாழ்க்கையின் ரியாலிட்டியை தான் சந்திக்க வேண்டியிருந்ததாகவும் சமந்தா தன்னுடைய இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











