Samantha: சூர்யா ரசிகை முதல் பான் இந்தியா ஸ்டார் வரை... சினிமாவில் கலக்கும் சென்னை பொண்ணு சமந்தா
சென்னை: விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஏ மாயா சேசவா படத்தில் நடிகையாக அறிமுகமானார் சமந்தா.
குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பால் தடம் பதிக்கத் தொடங்கினார்.
மிக எளிமையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த சமந்தா இன்று பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவின் கேரியர் குறித்து தற்போது பார்க்கலாம்.

பான் இந்தியா ஸ்டார் சமந்தா : சூர்யாவின் ரசிகையாக சினிமாவை ரசிக்கத் தொடங்கிய ஒருவர், பான் இந்தியா ஸ்டாராக வலம் வர முடியும் என்றால் அதனை நம்ப முடிகிறதா. நடிகை சமந்தாவை நன்றாக தெரியும் என்றாலோ, அவரது நடிப்புக்கு ரசிகராக இருந்தாலோ நீங்கள் இதை நம்பிதான் ஆக வேண்டும். ஆம்! மிக எளிமையான குடும்பப் பின்னணியில் சினிமா பின்புலம் இல்லாத ஒருவராக தான் நடிகையானார் சமந்தா.
தனது கல்லூரி காலங்களில் கஜினி, சில்லுன்னு ஒரு காதல் படங்களை திரையரங்குகளில் பார்த்தபோது, சூர்யாவின் ரசிகையாக விசிலிடித்து கொண்டாடியவர் சமந்தா. சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் ஜோடியாக நடித்தபோது சமந்தாவே சொன்ன வார்த்தைகள் இது. ஆனால், நடிகைகளில் ஒருவராக இல்லாமல் தனித்த கலைஞராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. சினிமாவில் அறிமுகமான 13 ஆண்டுகளில் இப்படியொரு முதிர்ச்சியான நடிகையாக வலம் வர தனி அசாத்தியம் வேண்டும்.
சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு. ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பகால கல்வியை முடித்தார் சமந்தா. பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். திரையுலகில் எந்த அனுபவமும் பின்னணியும் இல்லாததால், முதலில் மாடலிங்கில் தடம் பதித்தார். அதுவே அவரை வெள்ளி திரை வரை கொண்டு சேர்த்தது.

கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனான ஏ மாயா சேசவா படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து ரசிகர்களை வசீகரம் செய்திருந்தார். இந்தப் படத்தில் சமந்தா ஜோடியாக நாக சைதன்யா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிட்டால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
நல்ல அகல விரிந்த நவாப்பழ கண்களும், ஹஸ்கியான குழந்தை வாய்ஸும் ரசிகர்களை மயக்கும் சமந்தாவின் ராஜபோதை எனலாம். க்யூட்டான பார்வைகளால் திரையில் ஜாலம் காட்டிய நடிகைகள் மத்தியில், தனது யதார்த்தமான உடல் மொழியையும் கூரான பார்வையையும் மிக இயல்பாக பயன்படுத்தினார். சமந்தாவின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களின் மனதோடு மிக ஆழமாக பதிந்தது.
சினிமாவில் பயணிக்கத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்களில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். அஞ்சான், கத்தி, தங்க மகன் போன்ற படங்கள் சமந்தாவின் ஆர்ப்பாட்டமில்லா நடிப்பை விருந்தாக்கியது. தெறி, 24, தெலுங்கில் மனம், பிரம்மோத்ஸவம், ரங்கஸ்தலம் படங்கள் சமந்தாவை அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு கொண்டு சென்றது.
"தம்பி வாடா அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்" என மெர்சல் படத்தில் விஜய்யை அழைத்த சமந்தாவுக்கு, ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் தம்பியாகிப் போனார்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற மிடுக்கான நடிப்பும் அழகும் ரோஸ் மில்க்கைப் போலவே சமந்தாவிடம் ததும்பிய தருணங்கள் அவை. ஏக்கம், காமம், பரிதவிப்பு, பயம், பாவம், தடுமாற்றம் என பெண்களின் பல நுட்பமான உணர்வுகளை சூப்பர் டீலக்ஸ் படத்தின் வேம்பு கேரக்டரில் கண்முன்னே காட்டினார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்சம் தொட்டிருந்த சமந்தா, தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் இன்னுமொரு அசுர பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டினார். அதன் வெளிப்பாடு தான் இன்று யசோதா, சாகுந்தலம், சிட்டாடல் வெப் சீரிஸ் என பான் இந்தியா ஸ்டாராகவும் கலக்கி வருகிறார். நாக சைதன்யாவுடன் காதல், திருமணம், சில வருடங்களிலேயே பிரிவு, மயோசிடிஸ் பிரச்சினை என உளவியல் ரீதியாகவும் உடல் அளவிலும் பல சோதனைகள், நெருக்கடிகள்.
ஆனாலும் எதற்கும் கலங்காமல் தனது இலக்கை நோக்கி துல்லியமாக பயணித்து வரும் சமந்தா, திரையுலகில் ஒரு குறிஞ்சிப் பூ தான் என்றால் மிகையாகாது. ரசிகையாக சினிமாவை அதிசயித்துப் பார்த்த சமந்தாவை, இன்று அந்தத் திரையுலகமே ஒரு பேரதிசயமாக கொண்டாடுகிறது, ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். இதே கொண்டாட்டம் சமந்தாவின் வாழ்வில் மேலும் தொடர தமிழ் பிலிமீபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி மகிழ்வோம்.


Click it and Unblock the Notifications











