என்ன கொடுமை சார் இது.. பாட்டிக்கும் சேர்த்து சான்ஸ் தேடும் பிரபல வாரிசு நடிகை!
தனது பாட்டிக்காக பட வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.
சென்னை: தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் தனது பாட்டிக்கும் படத்தில் ஏதாவது கனமான கதாபாத்திரம் இருக்கிறதா என கேட்கிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ரஜினியின் நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மேனகா. தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி எனக் கூறப்படுகிறது. அந்தளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

பாட்டி சரோஜா:
இவரது பாட்டியும், மேனகாவின் அம்மாவுமான சரோஜாவும் நடிகை தான். இடையில் நீண்ட காலம் நடிப்பதில் இருந்து விலகி, ஓய்வில் இருந்த அவர், தனது 80 வயதில் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாகி இருக்கிறார்.

தாதா 87 நாயகி:
ரெமோவில் கீர்த்தி சுரேஷின் பாட்டியாகவே நடித்த அவர், கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர, சாருஹாசன் நாயகனாக நடிக்கும் தாதா 87 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சான்ஸ் கேட்கும் கீர்த்தி:
இந்நிலையில், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் தனது பாட்டிக்கும் படத்தில் கனமான கதாபாத்திரம் ஏதும் இருக்கிறதா எனக் கேட்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, ‘டம்மியான வேடமாகக் கொடுத்து என் பாட்டியின் திறமையை அவமதித்து விடாதீர்கள். அவர் மூன்று தலைமுறை நடிகை. அதனால் நல்ல கனமான வேடமாகக் கொடுங்கள்' என கோரிக்கையையும் முன்வைக்கிறாராம்.

வித்தியாசமான வழக்கம்:
பெரும்பாலும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் எல்லாம் தன்னுடன் முந்தைய படத்தில் நடித்த ஜோடிக்கு அல்லது தன் தங்கை, தம்பிக்கு பட வாய்ப்பு கேட்பது தான் வழக்கம். ஆனால் அவர்களில் இருந்து வித்தியாசப்பட்டு கீர்த்தி சுரேஷ் தன் பாட்டிக்காக பட வேட்டை நடத்துவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











