விஜய்காந்த் செய்த உதவி.. மறக்கவே முடியாது.. நல்ல மனிதர்.. நடிகை சிவரஞ்சனி நெகிழ்ச்சி!
ஐதராபாத்: நடிகை சிவரஞ்சனி தன்னுடைய தனிப்பட்ட கண்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். விஜயகாந்த், அரவிந்த் சாமி என தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சிவரஞ்சனி.
ஸ்ரீகாந்த் தமிழில் நடிகர் விஜய்யின் அண்ணனாக வாரிசு படத்தில் நடித்தவர்தான். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததாகவும் ஆனால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவே தனக்கு அதிகமான விருப்பம் என்றும் சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். அதனால் பட வாய்ப்புகளை தான் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

நடிகை சிவரஞ்சனி: நடிகை சிவரஞ்சனி கன்னட படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த போதிலும் இவருக்கு அதிகமான தமிழ் படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. நடிகர் விஜயகாந்த், கார்த்திக், அரவிந்த்சாமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சிவரஞ்சனி. இவரது யூனிக்கான கண்கள் அதிகமாக பாராட்டப்பட்டவை. காந்த கண்ணழகி என்றும் இவரை சினிமாவில் பேசுவதுண்டு. தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்த சிவரஞ்சனி தொடர்ந்து மனசார வாழ்த்துங்களேன், தலைவாசல், தங்க மனசுக்காரன் என அடுத்தடுத்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த சிவரஞ்சனி, முன்னணி நடிகையாக இருந்த போதே தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாரிசு படத்தில் நடிகர் விஜய்யின் அண்ணனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். இதனிடையே சிவரஞ்சனி தற்போது கொடுத்துள்ள பேட்டியில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்பு தனக்கு முன்னணி நடிகர்களுடன் மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். ஆனால் இந்த படங்களை வெளிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.
விஜயகாந்த் செய்த உதவி: இந்நிலையில் தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் குறித்து அவர் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் முரளி குறித்தும் அவர் பேசியுள்ளார். அவர் மிகச்சிறந்த நடிகர் என்றும் தனக்கும் உடன் நடிப்பதற்கு அதிகமான டிப்ஸ்களை கொடுப்பார் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் நடிகர் கார்த்திக்குடன் ஒரு படத்திலும் சென்னையில் நடிகர் விஜயகாந்துடனன் ராஜதுரை படத்தில் தான் நடித்ததாகவும் அடுத்தடுத்து இரண்டு படங்களின் சூட்டிங் தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்ற நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரச்சனையை கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த் இயக்குனருடன் பேசி தனக்கு உதவியதாகவும் சிவரஞ்சனி கூறியுள்ளார்.
ராஜதுரை படம் குறித்து மகிழ்ச்சி: இயக்குநர் எஸ்ஏசியுடன் பேசி, தன்னுடைய டேட்ஸ்களை அட்ஜஸ்ட் செய்ததாகவும் சக நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை மிகவும் சிறப்பாக விஜயகாந்த் கையாள்வார் என்றும் சிவரஞ்சனி பாராட்டு தெரிவித்துள்ளார். மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்புகூட தன்னுடைய கணவரிடம் நடிகர் விஜயகாந்த் தொலைபேசி மூலம் ஒரு விஷயமாக பேசியதாகவும் அப்போது தன்னையும் நலம் விசாரித்ததாகவும் தன்னுடைய மகிழ்ச்சியை சிவரஞ்சனி பகிர்ந்துள்ளார். தற்போது ராஜதுரை படம் விஜய்யின் கோட் படத்துடன் கம்பேர் செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தப் படத்தின் நாயகியாக நடித்துள்ளவர் சிவரஞ்சனி. இதுகுறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். தற்போதும் தன்னை ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளது குறித்தும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











