அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்.. மலையாள சினிமாவில் நடப்பது என்ன? ஊர்வசி பேட்டி!
சென்னை: ஹேமா கமிஷன் வெளியாகி மலையாள சினிமாவையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்ததை அடித்து, அவர் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதுகுறித்து நடிகை ஊர்வசி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஹேமா கமிஷன் அறிக்கையில் இப்போது கேரளாவில் புயலை கிளப்பி இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், கேரளாவில் இது போன்ற பாலியல் ரீதியாக யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட குழு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்கள் ஆஜராக, தங்கள் பெயர் எதுவும் வெளியில் வராது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளிவர முழுக்காரணம் பினராயி விஜயன் தான்.

பெண்கள் முன்வந்தார்கள்: இந்த அறிக்கை வெளியானதில் இருந்து இது என்னமோ கேரள சினிமாவில் தான் அதிகமான நடப்பதாக செய்தி வெளியாகிறது. அது நிச்சயமாக உண்மை இல்லை. வட மாநிலத்தில் நடக்கிறது, மருத்துவமனை, கல்லூரி இப்படி ஆண், பெண் என இருவரும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடக்கிறது. ஆனால், கேரளாவில் தான் பெண்கள் தைரியமாக முன் வந்து சொல்லி இருக்கிறார்கள். ஒரு பெண் நடிகை தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட போது, மற்ற நடிகைகளும் நாங்களும் இப்படித்தான் பாதிக்கப்பட்டோம் என்று சொல்ல விரும்பினார்கள். இதற்கு அரசும் துணையாக இருந்து இந்த கமிட்டியை அமைத்தது.
மற்ற மொழிகளில் இல்லையா: மலையாள திரைத்துறையில் இருக்கும் பெண்கள் தைரியமான பெண்களாக இருந்ததால் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கு, அதற்காக மலையாள சினிமாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது என்று சொல்ல முடியாது. மற்ற மொழி சினிமாவில் இப்படி சொல்ல யாரும் முன்வரவில்லை என்பது தான் உண்மை. ஹேமா கமிஷன் அறிக்கையை நான் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கிறேன்.
தீர விசாரிக்க வேண்டும்: உண்மையில் அந்த அறிக்கையில் நடிகைகள் அடிப்படை வசதி இல்லை, சம்பளம் சரியாக தருவதில்லை, சில நேரத்தில் இரவில் கதவை தட்டுகிறார்கள் என்கிற தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் அதில், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்கள். ஒரு பெண் சொல்லிவிட்டார் என்பதற்காக உடனே ஒருவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அந்த புகார் குறித்து தீர விசாரித்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம்: அதே போல, ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் பிடித்து இருந்தால், அது வேறு, ஆனால் ஒரு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான், பட வாய்ப்பு என்று மிரட்டி பணிய வைக்கும் பட்சத்தில், அது நீதிமன்றம் மூலமாக வெளிக்கொண்டுவரப்படும், அப்போது மீண்டும் ஒரு வெடி வெடிக்கும், இப்போது இதுதான் முதல்படி என்று நடிகை ஊர்வசி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











