ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர்.சி.. நேரில் சந்தித்துக்கொண்ட குஷ்பூ - கமல்ஹாசன்.. என்ன காரணம்?
சென்னை: ரஜினியை வைத்து கமல் தயாரிக்கவிருக்கும் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பினை வேண்டாமென்று மறுத்துவிட்டார் சுந்தர்.சி. அவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குநரை ஃபிக்ஸ் செய்வார்கள் என்று கேள்வி எழுந்திருக்கும் சூழலில்; பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் பெயர் லேட்டஸ்ட்டாக அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
ரஜினி ஹீரோவாக நடிக்க கமல்ஹாசன் தயாரிக்க; தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் சுந்தர். அந்த அறிக்கையில், "இந்தப் படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுகிறேன். இந்த முடிவை நான் கனத்த இதயத்தோடு எடுக்கிறேன். வாய்ப்பு கொடுத்த ரஜினி - கமலுக்கு நன்றி. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
என்ன காரணம்?: சுந்தர்.சியின் இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு யூகங்களையும் பேச்சுக்களையும் கிளப்பிவிட்டன. முக்கியமாக சுந்தர்.சி சொன்ன கதை பிடிக்காததால்தான் இந்த கூட்டணி முறிவு நடந்ததாக பலரும் சொன்னார்கள். அதேபோல் இன்னொரு தரப்பினரோ, 'ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் சுந்தர் இந்த படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் கமல் அதற்கு ஒத்துவராததால் இந்த முடிவு' என்றும் கூறினார்கள்.

குஷ்பூவை இழுத்துவிட்ட ரசிகர்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இதில் குஷ்பூவையும் சில ரசிகர்கள் இழுத்துவிட்டார்கள். அதாவது தலைவர் 173 படத்தில் ரஜினியுடன் குஷ்பூ ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டிய சூழ்நிலை வந்தது; அதனால்தான் சுந்தர் வெளியேறினார் என எல்லை மீறி பேசினார்கள். இதை பார்த்த குஷ்பூவோ, இல்லை உங்கள் வீட்டிலிருந்து ஏதோ பெண்ணை ஐட்டம் டான்ஸ் ஆட வைக்கலாம் என அவர்களுக்கு நெத்தியடி பதிலை கொடுத்திருந்தார்.
கமலுடன் சந்திப்பு: இந்நிலையில் கமல்ஹாசனும், குஷ்பூவும் சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது நடிகை சுஹாசினியும் அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோதுதான் இச்சந்திப்பு நடந்தது.
யார் அடுத்த இயக்குநர்: இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவும் புகைப்படமும் ட்ரெண்டாகியிருக்கின்றன. இதற்கிடையே தலைவர் 173 பட இயக்குநர் இவர்தான் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் சூழலில்; லேட்டஸ்ட்டாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் பெயரும் லிஸ்ட்டில் சேர்ந்திருப்பதாக ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











