அந்த விஷயத்தில் அவரு பெட்டர்.. அதுக்காகவே நான் இதைச் செய்வேன்.. ஐஸ்வர்யா லட்சுமி பளிச்னு சொல்லிட்டாங்களே
சென்னை: விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகமும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசிய விஷயம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கருணாகரன், முனிஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகியுள்ளது.

அடுத்த படமும் அவருடன்தான்: டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, "நான் அடுத்த படமும் விஷ்ணு விஷால் சாருடன்தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அவரிடமே சொல்லிவிட்டேன். ஒரு நடிகையாக எனக்கு முழுமையான முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களைத்தான் அவர் தேர்வு செய்கிறார். 'கட்டா குஸ்தி' முதல் பாகத்தில் எனக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுத்தார்கள். அதேபோல இந்த இரண்டாம் பாகத்திலும் எனது கதாபாத்திரத்திற்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது" என்று கூறினார்.
நடிகர் மட்டுமல்ல.. தயாரிப்பாளராகவும் சூப்பர்: மேலும் பேசிய அவர், "விஷ்ணு விஷால் சார் ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மிகவும் கம்ஃபர்ட்டான மனிதர். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்யும் சூழலை உருவாக்கிக் கொடுப்பார். அதனால்தான் அவருடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது" என்று மனம் திறந்து பாராட்டினார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தப் பேச்சு மேடையில் இருந்த விஷ்ணு விஷாலை நெகிழ்ச்சியடையச் செய்தது. முதல் பாகத்தில் இருவருக்கும் கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு காத்திருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கட்டா குஸ்தி 2' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications