ரசிகர்களை ஐஸ்சாக உருக வைத்த ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் ஸ்பெஷல்
சென்னை : மாடலாக வாழ்க்கையை துவங்கி, உலக அழகி பட்டத்தை வென்று, இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். 1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வான ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு சோஷியல் மீடியாக்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது அழகிய கண்களால் ரசிகர்களை ஐஸ் போல் உருக வைத்த ஐஸ்வர்யா ராய்க்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். அழகுக்கு உதாரணமாக சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

மணிரத்னத்தின் அறிமுகம்
தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய், பிறகு தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு இந்தி, ஆங்கலம், பெங்காலி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்த வந்தார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் ஐஸ்வர்யா ராய்.

இரட்டை வேடம்
அதன் பிறகு 2010 ல் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சனா கேரக்டரில் நடித்தார். பிறகு மீண்டும் பாலிவுட் படங்களில் பிஸியான ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் 11 ஆண்டுகள் கழித்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார். இதில் நந்தினி, மந்தாகினி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.

காதல் கிசுகிசுக்கள்
பாலிவுட்டில் பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஆரம்பத்தில் சல்மான் கானுடன் காதலில் இருந்து வந்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை பிரிவதாக அறிவித்தார். அதன் பிறகு விவேக் ஓபராயை தான் அவர் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்பட்டது.

அபிஷேக் உடன் காதல்
ஆனால் தூம் 2 படத்தில் இணைந்து நடித்த போது அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இடையே காதல் ஏற்பட்டது. 2007 ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மிக அழகான, ஸ்டைலிஷான காதல் தம்பதியாக சர்வதேச விழாக்கள் பலவற்றிலும் வலம் வந்த இந்த ஜோடிக்கு 2011 ம் ஆண்டு ஆராதியா என்ற மகள் பிறந்தாள். குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா ராய், சமீப ஆண்டுகளாக மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார்.

முதல் தென்னிந்திய மொழி படம்
கூல்டிரிங்ஸ், நகைக்கடை, சோப் என முன்னணி சர்வதேச நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். தமிழ், இந்தி என இதுவரை சுமார் 46 படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதுவரை தென்னிந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரே சமயத்தில் வெளியாக போகும் ஐஸ்வர்யா ராய் நடித்த முதல் படம் பொன்னியின் செல்வன் தான்.


Click it and Unblock the Notifications











