அட்டகாச தொடக்கம் கொடுத்த அட்டகத்தி.. மனசை அள்ளிய தர்மதுரை.. HBD பன்முக நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை: தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வந்துச் சென்றாலும் நடிப்பால் பேசப்பட்டவர்களில் சில நடிகைகளே பெரும்புகழ் பெற்று நீண்டகாலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளனர். கவர்ச்சியால் காலந்தள்ளும் நடிகைகள் ஒரு பக்கம் இருக்க விதவிதமான கதாபாத்திரங்கள் மூலம் 10 ஆண்டுகளில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 31 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

நம்ம வீட்டுப்பெண் ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமாவில் கால் பதிக்க கவர்ச்சியான தேகம், கலர், வடநாட்டு வரவு என்கிற அம்சம் வேண்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி சாதாரணமாக நம்ம வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் மாநிறத்துடன் 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். சென்னை பெண்ணான இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டம் படித்து முடித்தப்பின் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குப்பெற்றார். அதன்பின் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குப்பெற்று வெற்றிப்பெற்றார்.

அட்டக்கத்தி படத்தால் பிரபலம்
இதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்கிற படத்தில் நடித்தார் படம் பெரிதாக போகவில்லை. அதன் பின் அவர்களும் இவர்களும், உயர்திரு 420,சட்டப்படி குற்றம், விளையாட வா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித்தின் முதல்படமான அட்டக்கத்தியில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதன் மூலம் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகை விருது
அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்தார். திருடன் போலீஸ் படத்தில் மீண்டும் அட்டக்கத்தி தினேஷுடன் மாடர்ன் பெண்ணாக நடித்தார். 2014 ஆம் ஆண்டில் இளம் நடிகைகள் நடிக்க பயப்படும் வேடத்தில் இரண்டு சிறுவர்களின் தாயாக காக்கா முட்டை படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் திரையுலகில் கனமான பாத்திரத்தை இலகுவாக செய்யும் ஒரு நடிகை கிடைத்துவிட்டார் என்பதை காட்டியது. இதற்காக இவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

பேர் வாங்கிக்கொடுத்த தர்மதுரை
2016 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறப்பான ஆண்டு எனலாம். ஜீது ஜோசப்பின் மெமரீஸ் மலையாளப்பட தழுவல் படத்தில் அருள்நிதியுடன் நடித்தார், அடுத்து மனிதன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தார், விஜய் சேதுபதியுடன் மீண்டும் தர்மதுரையில் இணைந்தார். இதில் விஜய் சேதுபதியின் காதலியாக வந்து பின்னர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள்ளும் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

2018-ல் முத்திரைப்பதித்த வடச்சென்னை உள்ளிட்ட படங்கள்
அதன்பின்னர் மலையாளம், இந்திப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் 2018 ஆம் ஆண்டு சாமி-2, மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம், வெற்றிமாறனின் வடச்சென்னை படங்களில் நடித்து புகழ்ப்பெற்றார். அதே ஆண்டில் கனா படம் அவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தங்கையாக நம்ம வீட்டுப்பிள்ளை படமும் அவருக்கு பெயர் வாங்கித்தந்தது.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்
கடந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மணி ரத்தினத்தின் பொன்னியின் செல்வன், புகழ்பெற்ற படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திலும் நடிக்கிறார். இது அவருக்கு சிறப்பான பெயரைப்பெற்றுத்தரும். இதுவல்லாமல் இந்த ஆண்டு மலையாளத்தில் புலிமட (புலி வசிக்கும் பகுதி) என்கிற மலையாளப்படத்தில் ஜோஜு ஜார்ஜுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
Recommended Video

ஒரு ரவுண்டு வலம் வருவார்
நாளுக்கு நாள் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிப்பில் முத்திரைப்பதித்து முன்னேறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் நீண்டகாலம் வலம் வருவார் அதற்கான பாதையை அவர் எப்போதோ அமைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











