Aishwarya Rajesh - அமைச்சர் ரொம்பவே அழகாக இருக்கிறார்.. மேடையில் ஓபனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
முன்னணி நடிகை: திறமையான நடிகையான அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.
மலையாளத்தில் ஐஸ்வர்யா: இந்த சூழலில் அவர் மலையாள திரையுலகிலும் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.அதுமட்டுமின்றி மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.
சிறப்பு விருந்தினர்: இந்நிலையில் இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் மட்டுமின்றி சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "பொங்கல் கொண்டாட்டம் நான் நினைத்ததுபோலவே சிறப்பாக இருந்தது. அமைச்சர் என்று சொன்னவுடன் அவர் வயதான நபராக இருப்பார் என்றுதான் நினைத்தேன்.
ரொம்ப அழகாக இருக்கிறார்: ஆனால் அவருக்கு வயது ரொம்பவே குறைவு. அதுமட்டுமின்றி ரொம்ப அழகாக இருக்கிறார். முதன்முறையாக குறைந்த வயதில் ஒருவர் அமைச்சராகி இருக்கிறார். அமைச்சர் ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் மக்களுக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார். ஜீவன் தொண்டைமான் என்பவர் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக இலங்கையில் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











