Aishwarya Lakshmi - சொகுசு கார் வாங்கியிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி.. அடேங்கப்பா விலை இவ்வளவா?
சென்னை:நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாளம் மற்றும் தமிழில் பெயர் சொல்லும்படியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களை கிறங்கடித்தார். மேலும் கட்டா குஸ்தி படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தும் அதகளம் செய்திருந்தார் அவர். இந்தச் சூழலில் அவர் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதன் விலையை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஐஸ்வர்யா லட்சுமி. கடந்த 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பிறந்தார். அடிப்படையில் மருத்துவரான இவருக்கு மாடலிங் மீது தீராத ஆர்வம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் பத்திரிகைகளின் அட்டை படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஃப்ளவர் வேர்ல்டு என்ற பத்திரிகைக்கு கொடுத்த போஸ் ஃபேமஸானது. அதனையடுத்து அக்ஷயா ஜுவல்லரிஸ் உள்ளிட்ட நகைக்கடைகளுக்கும் மாடலாக இருந்தார்.

நடிப்பில் எண்ட்ரி: அவர் மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி அவர் மலையாளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான என்ஜன்டுகலுடே நாட்டில் ஒரிடவலே என்ற படத்தின் மூலம் எண்ட்ரி ஆனார். அதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்தார்.அந்தப் படத்தைத் தொடர்ந்து மாயநதி, வரதன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ஃபேமஸ் ஆனார்.
தமிழில் ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இருந்தாலும் இதற்கு முன்னதாகவே விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் படத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஜகமே தந்திரம் படத்தில் ஈழத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாகவே கவனம் ஈர்த்தார்.
தமிழில் பலத்த வரவேற்பு: அதனைத் தொடர்ந்து புத்தம்புது காலை விடியாதா, கேப்டன், கார்கி, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பொதுவாக மலையாள தேசத்து நடிகைகள் மீது தமிழ் ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கும் என்பதற்கேற்ப சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா லட்சுமியை கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் தமிழில் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார்.
பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி: அவரது கரியரில் முக்கியமான படங்களாக அமைந்தது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும், கட்டா குஸ்தி படமும்தான். பொன்னியின் செல்வனில் அவர் ஏற்றிருந்த பூங்குழலி கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். முக்கியமாக கல்கி எழுதிய பூங்குழலி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி உயிர் கொடுத்துவிட்டார் என்று கூறினர்.
மேலும் இனி பொன்னியின் செல்வன் பூங்குழலி என்றால்ரே ஐஸ்வர்யாதான் நினைவுக்கு வருவார் என்றும் படம் பார்த்தவர்கள் கூறினர். அதேபோல் கட்டா குஸ்தி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் போல்டான கதாபாத்திரம். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சொகுசு கார்: இந்நிலையில் அவர் Range Rover Evoque 2024 என்ற லேட்டஸ்ட் மாடல் சொகுசு காரை வாங்கியிருக்கிறார். கேரளாவில் இதுவரை யாருமே இந்த மாடலில் காரை வாங்கியது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இம்மாடல் கார் வாங்கும் முதல் நபர் என்ற பெருமையை கேரளாவில் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்தக் காரின் விலை ஒரு கோடி ரூபாய்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











