நான் வாங்கிக்கொடுத்தேன்.. உயிரிழந்துவிட்டார்.. சில்க் ஸ்மிதா மரணத்தில் நடந்தது என்ன?.. நடிகர் ஓபன்
சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
காந்த கண்ணழகி, திராவிட பேரழகி என்று புகழப்பட்டவர் சில்க். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு ஆந்திரா பூர்வீகம். குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் அதன் பிறகு இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

சில்க்கின் அறிமுகம்: தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.
திராவிட பேரழகி: இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சூழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
தற்கொலை: தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா காதலுக்காகவும், அன்புக்காகவும் ரொம்பவே ஏங்கியவர். அவர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். முக்கியமாக அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது மனதில் பெரிய மாளிகையையே கட்டி வைத்திருந்தார். ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா காதலித்தவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆனந்த்ராஜ் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு சில்க் ஸ்மிதா நல்ல தோழியாக இருந்தார். டர்ட்டி பிக்சர் படத்தை பார்த்தேன். அதில் சில்க் பற்றி நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை. அந்தப் படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நான் இன்னும் சில விஷயங்களை சொல்லியிருப்பேன். படமும் இன்னும் சூப்பராக வந்திருக்கும். சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தேன்.
பரிந்துரை செய்தேன்: அந்தப் படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக சொன்னார்கள். நான் உடனே சில்க் ஸ்மிதாவை ஆட வைக்கலாம் என்று பரிந்துரை செய்தேன். அவர்களும் ஒத்துக்கொண்டு சில்க்கிற்கான சம்பள செக்கையும் என்னிடம் கொடுத்துவிட்டார்கள். அந்தப் பாடல் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நாளில்தான் சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் அதை கேட்டு அதிர்ந்து போய்விட்டோம். பின்னர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டோம். சில நாட்கள் கழித்து அந்தப் பாடலில் அல்போன்சா நடனம் ஆடினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











