மாஸ்க் மட்டுமில்லை ஆண்ட்ரியாவும் அடி வாங்குறாங்களே.. இது தேவையா?.. இலுமினாட்டியால் வந்த சோதனை
சென்னை: ஆண்ட்ரியா பாடகியாகவும், நடிகையாகவும் மட்டுமே வலம் வந்துகொண்டிருந்தார். ஆனால் கவின் ஹீரோவாக நடித்த மாஸ்க் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இலுமினாட்டி பாடலை பாடிய ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாடகியாக தனது பயணத்தை கோலிவுட்டில் ஆரம்பித்த ஆண்ட்ரியா; கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், அழகும் அனைவரையும் கவர்ந்துவிட்டதன் காரணமாக தொடர்ந்து அவர் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. அதன்படி ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என வரிசையாக நடித்து தன்னை பிஸியான நடிகையாக வைத்துக்கொண்டார்.
பாடலையும் விடாத ஆண்ட்ரியா: பொதுவாக நடிக்க ஆரம்பித்து அதில் பணமும், புகழும் வர ஆரம்பித்துவிட்டால் தங்களது முந்தைய கரியரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுபவர்களே அதிகம். ஆனால் ஆண்ட்ரியா அப்படி இல்லை. தான் அடையாளப்படுவதற்கு காரணமாக இருந்த பாடல்களை அவர் விடவே இல்லை. சினிமாக்களில் பாடுவது, கச்சேரிகளில் பாடுவது என அந்த ரூட்டிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்.

வடசென்னை ஆண்ட்ரியா: அவரது நடிப்பு கரியரை பொறுத்தவரை வடசென்னை படம் முக்கியமான படம். வெற்றிமாறன் இயக்கியிருந்த அப்படத்தில் சந்திரா என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். படத்தில் இருந்த ஏகப்பட்ட பிளஸ்களில் அவரது நடிப்பும் ஒன்று. இன்றுவரை சந்திரா கதாபாத்திரத்தை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடிவருகிறார்கள். மேலும் அந்த கேரக்டர்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களையும் பறக்கவிடுகிறார்கள்.
தயாரிப்பாளர் அவதாரம்: இதுவரை பாடகி, நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த ஆண்ட்ரியா மாஸ்க் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். கவின் ஹீரோவாக நடித்து விகர்ணன் இயக்கியிருந்த அப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தயாரித்தது மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார். அவரது நடிப்பு உண்மையில் மிரட்டும்படி இருந்ததாக ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள்.
எவ்வளவு வசூல்: இப்படத்தை தயாரிப்பதற்காக அவர் தனது வீட்டை அடமானம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே படம் நல்லபடியாக வெற்றி பெற்று அவருக்கு வீடு திரும்ப கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இதுவரை படமானது இந்தியாவில் மொத்தம் 4.31 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் அறிவித்திருக்கிறது. இது நினைத்ததைவிட கொஞ்சம் டல்லான வசூல்தான்.
ட்ரோல் செய்யும் ரசிகர்கள்: இது ஒருபக்கம் இருக்க கான்செர்ட் ஒன்றில், ஆவேஷம் படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி பாடலை பாடினார் ஆண்ட்ரியா. மேடையில் அந்தப் பாடலை அவர் பாடியபோது அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்யாவிட்டாலும் அந்த வீடியோவை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் வித்தியாசமாக பாடுகிறேன் என்கிற பெயரில் அந்தப் பாடலையே கெடுத்துவிட்டாரே என்றும் கமெண்ட்ஸ் பறந்துவருகின்றன.


Click it and Unblock the Notifications











