சுப்புரபாதம் கேட்குறவங்களுக்கு சூப்பு கடைல என்ன வேலை.. தனுஷ் அக்கா மகனை விடுங்க.. அனிகா மாட்டிக்கினாரு!
சென்னை: தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், சோசியல் மீடியா முழுவதும் அந்த படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
படம் வெளியான போதே தம்பி அந்தப் பக்கம் போய்விடாதே என பலரும் விமர்சித்த நிலையில் தனுஷ் இயக்கியிருந்தாலும் அவரது அக்கா மகன் அறிமுகமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்த படத்தை எல்லாம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என விட்ட ரசிகர்கள், தற்போது சுமார் மூஞ்சி குமார் படங்களை இறக்கி வரும் அமேசான் பிரைமுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி வெளியாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்துவிட்டு பவிஷ் கூட பரவாயில்லைங்க, அந்த குட்டி நயந்தாரா அனிகா சுரேந்திரனின் நடிப்புதான் சிரிப்பு தாங்கவில்லை என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
குரல் மட்டும் தனுஷ் மாதிரி: திறமைகள் பல இருக்கும் இளைஞர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது எட்டாக்கனியாக உள்ள நிலையில், வாரிசு நடிகர்களுக்கு சினிமா வாய்ப்புகள் எப்படி வழங்கப்பட்டு வீணடிக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணமாக தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உள்ளது என்றும் தனுஷின் அக்கா மகன் பவிஷ் குரல் மட்டும் தனுஷ் போல இருக்கிறது. மற்றபடி நடிப்பு எல்லாம் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷிடம் இருந்த அளவுக்கு கூட இல்லை என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
அனிகா அல்டிமேட் காமெடி: அஜித்குமாரின் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் பயோபிக்காக வெளியான குயின் வெப்சீரிஸிலேயே ஓவர் ஆக்டிங் செய்திருந்தார் என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கிறேன் என்கிற பெயரில் காட்சிக்கு காட்சி அவர் சிரித்துக் கொண்டிருப்பது ரசிகர்களை ஓடிடியிலும் டென்ஷனாக்கி வருகிறது.
சூப்பு கடைல என்ன வேலை: சந்தானத்தின் காமெடி வசனமான சுப்ரபாதம் படிக்கிறவங்களுக்கு சூப்பு கடையில் என்ன வேலை என்கிற காமெடி வசனத்தை ஓடவிட்டு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அருகே இப்படி ஒரு சொதப்பலான நடிப்பை அதுவும் தனுஷ் இயக்கத்தில் எப்படி அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார் பாருங்கள் என ரக ரகமாக ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கி வருகின்றனர். இதில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் வேறு வரப்போகிறது என்பது போல் முடித்து இருப்பது தான் என்ன கொடுமை சரவணன் என சொல்ல வைக்கிறது.
டிராகன் தாறுமாறு: நெட்பிளிக்ஸில் ஆபிசர் ஆன் டியூட்டி மற்றும் டிராகன் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாகி ஓடிடி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாரம் தியேட்டரில் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், தாராளமாக ஓடிடியில் படம் பார்க்க நினைப்பவர்கள் நெட்பிளிக்ஸ் பக்கம் வண்டியை திருப்பலாம் என்கின்றனர். அந்த பீச்சில் கருவாட்டு குழம்பு வைக்கிற சீனை எல்லாம் லைஃப்லயே மறக்க மாட்டேன் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











