அனிகா சுரேந்திரனை இன்னும் தல பொண்ணுனே நினைச்சிட்டு இருக்காங்க.. மேடையில் கலாய்த்த இயக்குநர்!
சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'பிடி சார்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. கார்த்திக் வேணுகோபாலன் அந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ரியோ ராஜாவை வைத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபரான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஷ்மிரா நடித்துள்ளார். ஏற்கனவே அன்பறிவு படத்தில் காஷ்மீரா நடித்திருந்தார்.

மேலும், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையேறி பேசிய அந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் அனிகா சுரேந்திரன் குறித்து பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
குட்டி நயன்தாரா: என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், விஸ்வாசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில், தற்போது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிடி சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குட்டி நயன்தாரா என ரசிகர்களால் அனிகா சுரேந்திரன் கொண்டாடப்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஏகப்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.
தல பொண்ணு: நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இன்னமும் அனிகாவை கிராமத்தில் தல பொண்ணு என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர் எந்தளவுக்கு மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது இந்தப் படத்தைப் பார்த்தால் புரியும். நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு அவர் மேலும் பல இடங்களுக்கு செல்வார் என கார்த்திக் வேணுகோபாலன் பாராட்டியுள்ளார்.

படமே அவரை சுற்றி தான்: பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் தொல்லை குறித்து விரிவாக இந்த படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிடி சார் பள்ளி மாணவர்களின் நண்பனாக மட்டுமின்றி ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் பாதுகாவலனாகவும் இருப்பார் என்றும் அனிகா சுரேந்திரனுக்கு நடக்கும் பாலியல் தொல்லையை கண்டித்து பிடி சாரான ஹிப் ஹாப் ஆதி செய்யும் சம்பவத்தால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவது போல இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கில்லி போல இருக்கும்: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான புதிய படங்கள் ரசிகர்களை பெரிதளவில் கவராத நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மீண்டும் ரசிகர்களை திரையரங்குக்கு வர செய்துள்ளது. அந்த படத்தை போலவே விறு விறுப்பாகவும் என்டர்டெயின்மென்ட்டாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படமாக இந்த படம் இருக்கும் என்றும் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறியுள்ளார்.ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து கடைசியாக வெளியான வீரன் திரைப்படம் சுமாராக ஓடிய நிலையில், பிடி சார் படம் அடுத்த வாரம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











