கைவிட்ட தெலுங்கு இயக்குநர்கள்.. மலையாள கரையோரம் ஒதுங்கிய நடிகை.. கம்பேக் கொடுப்பாரா இஞ்சி இடுப்பழகி?
சென்னை : தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா சர்மா, முதல்முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா, சில படங்களிலேயே நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதிலும் நாயகியை மையமாக வைத்து உருவான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவை தமிழிலும் பிரபலப்படுத்தியது.

ஒரு பக்கம் அருந்ததி, இன்னொரு பக்கம் பில்லா என்று ரவுண்டு கட்டி அனுஷ்கா போட்ட ஆட்டத்தால், தெலுங்கு சினிமாவின் நாயகர்களுக்கு இணையான இடத்தை பிடித்தார் அனுஷ்கா. அதன்பின் தமிழிலும் வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார்.
இதன்பின் பாகுபலி படத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கில் அனுஷ்கா உச்ச நடிகையாக மாறினார். ஆனால் அதன்பின் அவர் நடித்த ருத்ரமாதேவி திரைப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல் "இஞ்சி இடுப்பழகி" படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டி நடித்தார். அந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், அனுஷ்காவால் உடல் எடையையும் குறைக்க முடியவில்லை.
அதன்பின் பாகுபாலி 2 படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற போது, அனுஷ்காவுக்கு எந்த படம் புக்காகவில்லை. அதன்பின் அவர் நடித்த பாகமதி, நிசப்தம் உள்ளிட்ட படங்களும் தோல்வியை தழுவின. இதன் நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி அண்ட் மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகியது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் அனுஷ்கா 6 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். ஆனால் இம்முறை தெலுங்கு, தமிழ் மொழியில் அல்லாமல் முதல்முறையாக மலையாளம் கரையோரம் ஒதுங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற "ஹோம்" திரைப்படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு "காத்தனார் - தி வொயில்ட் சார்சரர்" தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக ஜெயசூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலங்களில் சீனியர் நடிகைகளான த்ரிஷா, தமன்னா உள்ளிட்டோர் மலையாள படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தற்போது இவர்களை தொடர்ந்து அனுஷ்காவும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











