திரிஷா - நயன்தாரா மாதிரியே இரண்டு துருவங்கள்.. பகையாய் இருந்து உறவாய் மாறிய நடிகைகள் தெரியுமா?
சென்னை: திரிஷாவும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான் நேற்றிலிருந்து சோஷியல் மீடியாவில் உச்சக்கட்ட ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இரண்டு பேருமே கடந்த பல வருடங்களாக தொழில் போட்டியில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அவர்கள் சேர்ந்து எடுத்த ஃபோட்டோக்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.
சினிமா துறையில் நடிகர்களுக்கு இடையே எப்படி போட்டி இருக்குமோ அதேபோல் நடிகைகளுக்கு மத்தியிலும் காலங்காலமாக நிலவிவருகிறது. நடிகர்களுக்கு நிலவும் போட்டியைவிட நடிகைகளுக்கு இடையே நிகழும் போட்டி கொஞ்சம் சுவாரஸ்யம் கொடுப்பதாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் ஒரு ஹீரோவுடன் ஜோடி போட்டு ஹிட்டடித்துவிட்டால்; அந்த ஹீரோவுடன் இன்னொரு ஹீரோயின் அடுத்த படத்தில் ஜோடி போட்டு நடிப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடிகைகளுக்கு மத்தியில் நிலவும் போட்டியில் திரிஷா - நயன்தாரா போட்டி பிரபலமானது. இந்த கால தலைமுறை இளைஞர்களுக்கு இதற்கு முந்தைய தலைமுறையில் எந்தெந்த நடிகைகள் மத்தியில் போட்டி நிலவியது என தெரிந்திருப்பது கொஞ்சம் குறைவுதான்.
சிம்ரன் - ஜோதிகா: திரிஷா - நயன்தாரா போட்டி மாதிரியே இதற்கு முந்தைய தலைமுறை நடிகைகளில் சிம்ரன் - ஜோதிகா போட்டி வெகு பிரபலம். இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில் அறிமுகமானார்கள். சொல்லப்போனால் ஜோவுடன் சிம்ரன் கொஞ்சம் சீனியர். ஆனாலும் ஜோதிகாவின் வருகையும், அவரது வளர்ச்சியும் சிம்ரனுக்கு உறுத்தலாகவே இருந்தது. சிம்ரன் கமலுடன் ஜோடி சேர்ந்தால் ஜோதிகாவும் ஒரு படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பார். பலரும் அவர்களுக்குள் இருந்த போட்டியை பகையாய் மாற்ற முயன்றாலும் அதை அவர்கள் மாறவிட்டதில்லை. ஒருகட்டத்தில் வயது ஏற ஏற பக்குவமடைந்த இரண்டு பேரும் ஒருவரையொருவர் நல்லபடியாக வெளிப்படையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

மீனா - ரோஜா: அதற்கும் முந்தைய தலைமுறையை எடுத்துக்கொண்டால் மீனா - ரோஜா போட்டியை சொல்லலாம். ரோஜாவைவிட மீனா சீனியர். தமிழில் ஹீரோயினாக அடுத்தடுத்த வருடங்களில் இன்ட்ரோ ஆனார்கள். இரண்டு பேருமே ரஜினி உள்ளிட்டோருக்கு சூப்பர் ஜோடி என்று பெயர் எடுத்தவர்கள். இருவருமே கிளாமர், ஹோம்லி என எந்த ரோலாக இருந்தாலும் போட்டிப்போட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் உச்சக்கட்டமாக உரசல் எல்லாம் நடந்திருக்கிறது; ஒருவர் வரும் விழாவுக்கு இன்னொருவர் வர மறுக்கிறார் என அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் எல்லாம் வந்தன. ஆனால் அவர்கள் தங்களுக்குள் இருந்த போட்டியை எல்லாம் தாண்டி நல்லபடியாகவே பழகிவருகிறார்கள்.
குஷ்பூவுக்கு பலமுனை போட்டி: மீனா, ஜோதிகாவுக்கு எல்லாம் ஒரு நடிகைதான் பிராதன் போட்டியாக திகழ்ந்தார். ஆனால் குஷ்பூவுக்கோ நிலைமையே வேறு. அவர் நடிக்க வந்தபோது ராதா, அம்பிகா, ராதிகா போன்றோ பீக்கில் இருந்தார்கள். அவர்களை எல்லாம் அசால்ட்டாக குறுகிய காலத்தில் பீட் செய்து முன்னணிக்கு சென்றார் குஷ்பூ. ரஜினி, கமலுக்கு ஜோடியாக ராதா, அம்பிகா இருந்த இடத்தில் எல்லாம் குஷ்பூவின் வருகைக்கு பிறகு அதெல்லாம் அவரது இடமாக மாறியது. தனக்கு எதிராக நிலவிய பலமுனை போட்டியை அனாயசமாக சமாளித்தார் குஷ்பூ.
இவர்களும் தங்கள் காலத்தில் போட்டியால் உருவான சில உரசல்களை சந்தித்து பிறகு நல்லபடியாக பழகிக்கொள்ள ஆரம்பித்தார்கள். மேற்கூறிய அனைவருமே தங்களுக்குள் தொழில் ரீதியான பகையைத்தான் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது சின்ன சின்ன உரசல்கள் வந்திருக்கலாம். அதையெல்லாம் கடந்து இப்போது நல்ல தோழிகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்


Click it and Unblock the Notifications










