'விக்ரம்' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் நடிகை... கேரவனில் பெயர் இருக்கும் போட்டோ வைரல்!
சென்னை: விக்ரம் படத்தில் தான் நடிப்பதை நடிகை ஷிவானி நாராயணன் உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

பிக்பாஸில் பங்கேற்ற ஷிவானி
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் பிரபலமானார். இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டும் ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசிக் கொண்டும் இருந்தனர்.

டாஸ்க்குகளில் கவனம் செலுத்தவில்லை
ஆனால் ஷிவானி நாராயணன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. பெரியவர்களுடன் கடைசி வரை கண்ணியமாக நடந்து கொண்டார். யாரைப் பற்றியும் பின்னால் பேசாமலும் இருந்து வந்தார். இதனால் ரசிகர்களின் அன்புக்கு ஆளான ஷிவானி நாராயணன், பெரிதாக டாஸ்க்குகளில் கவனம் செலுத்தவில்லை.

பாலாஜிக்கும் ஷிவானிக்கும் காதல்
அதே நேரத்தில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவருக்கு கை கால் அழுத்தி விடுவது, மசாஜ் செய்து விடுவது, காலையில் எழுப்பி விடுவது, ஊட்டி விடுவது என இருந்தார். இதனால் பாலாஜி முருகதாஸுக்கும் ஷிவானிக்கும் காதல் என்று தகவல் பரவியது.

விஜய் சேதுபதிக்கு ஜோடி
இதனிடையே நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

ஹவுஸ்மேட்ஸ் கிண்டல்
மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்ற அக்ரிமெண்டிலும் இருந்து வந்தனர். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகளான ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலரே ஷிவானியையும் பாலாஜியையும் வைத்து கிண்டலடித்தனர்.

ஆயா வேலை செய்ய வந்தீயா?
இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் இங்கு வந்தீயா? என் மானத்தையே வாங்கிவிட்டாய் என ரைடு விட்டார். ஷிவானியின் அம்மா வைத்து வாங்கியதில் கதறி அழுதார் ஷிவானி.

அப்செட் ஆன பாலாஜி
மேலும் பாலாஜியை ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஷிவானியின் அம்மா அகிலா. இதனால் பாலாஜி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானியின் அம்மா பாலாஜியுடன் சமாதானமாகிவிட்டார். ஷிவானி வீட்டு விசேஷத்தில் எல்லாம் பங்கேற்றார் பாலாஜி.

ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள்
ஷிவானி பிறந்தநாளின் போது பாலாஜிக்கு அவரது அம்மா கேக் ஊட்டி விட்டார். அந்த போட்டோக்கள் எல்லாம் வைரலானது. அதன் பிறகு பிக்பாஸ் டீம் வெளியில் சந்தித்த போதும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

ரக்ஷா பந்தன் வாழ்த்து
இதனால் இருவரின் காதலுக்கும் ஷிவானியின் அம்மா சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என பேச்சு எழுந்தது. இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் அண்மையில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு பாலாஜி முருகதாஸுக்கு ராக்ஷா பந்தன் வாழ்த்து கூறி அவர் தனக்கு சகோதரர் தான் என்பதை சொல்லாமல் சொன்னார். இதனால் இருவரின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகம்
இதனை தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியின் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் போட்டோவும் வெளியானது. இதன் மூலம் ஷிவானி நாராயணன் கோலிவுட் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகம் ஆவதாகவும் கூறப்பட்டது.

விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா?
இதுவரை அதுகுறித்து அமைதி காத்து வந்த ஷிவானி நாராயணன் தற்போது அதுகுறித்து மவுனம் கலைத்துள்ளார். அதாவது சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேட்டார். இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி.

விக்ரம் பட கேரவனில்..
இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை ஷிவானி நாராயணன் உறுதி செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஷிவானி யாருக்கு ஜோடி?
இந்நிலையில் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் உறுதி செய்துள்ளார். ஆனால் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு யாருக்கேனும் ஜோடியா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











