கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்!
சென்னை: கொரோனா காரணமாக, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருந்தும் அது வேகமாக பரவி வருகிறது.

இரண்டாம் இடத்தில்
இதற்காக லாக்டவுன் விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் கட்டுக்குள் இல்லை. கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,971 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பை சந்திக்கும் மாநிலமாக மகாராஷ்ட்ரா இருக்கிறது. அங்கு 62 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகம் இருக்கிறது.

கொரோனா
இங்கு, இந்தத் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 246 ஆக இருக்கிறது. இந்த லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின் றனர். இருந்தும் இந்த கொரோனா தொற்று பரவி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவரும் தனது குடியிருப்பில் 14 நாள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழில் கிருஷ்ணா நடித்த கழுகு, பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட சில படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுத்து மயன், யாருக்கும் அஞ்சேல் படங்களில் நடித்துவரும் அவர், லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி உள்ளார். இந்நிலையில் நடிகை பிந்து மாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைத்துள்ளனர்.

வீட்டில் தனிமை
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ள பிந்து மாதவி, இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தானும் 14 நாள் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் விரைவில் குணமாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications