2012ல் மக்கள் மனதில் இடம் பிடித்த பாலிவுட் ஹீரோயின்கள்
மும்பை: 2012 பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூலை அள்ளித் தந்த ஹீரோக்களுக்கு மத்தியில் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோயின்களும் உள்ளனர்.
2012ம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. கான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பாலிவுட்டில் கரீனா கபூர் உள்ளிட்ட சில நாயகிகள் ஹீரோக்கள் அளவுக்கு உயர்ந்துள்ளனர். ஹீரோக்களுக்காக படத்தைப் பார்க்க தியேட்டர் செல்பவர்கள் தற்போது ஹீரோயின்களுக்காக படம் பார்க்கச் செல்கின்றனர்.
ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள திரையுலகில் கரீனா கபூர், ராணி முகர்ஜி, வித்யா பாலன், பிபாஷா பாசு, ஸ்ரீதேவி ஆகியோர் ஹீரோக்களுக்கு இணையாக தங்களாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதோடு வசூலிலும் காண்பித்துள்ளனர்.

ஹீரோயின் கரீனா கபூர்
ஒரு நடிகை புகழின் உச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து கீழே விழுவதை மாதுர் பந்தர்கர் கரீனா கபூரை வைத்து அழகாக எடுத்த படம் தான் ஹீரோயின். இதில் கரீனா தான் ஹீரோ என்றே சொல்லலாம். அவருக்காகவே, அவருக்காக மட்டுமே படம் ஓடியது.

தமிழ் நடிகரைக் காதலிக்கும் ராணி முகர்ஜி
அய்யா படத்தில் மராத்தி பெண்ணாக நடித்த ராணி முகர்ஜி தமிழ் நடிகர் கதாபாத்திரத்தில் வந்த பிரித்விராஜை காதலிப்பார். இந்த படத்தில் பிரித்விராஜ் இருந்தாலும் ராணி தான் ஹீரோ என்றே கூறலாம். ரசிகர்களும் அவருக்காகத் தான் தியேட்டருக்கு சென்றனர்.

வித்யா பாலனின் கஹானி
வித்யா பாலன் என்றைக்கு தி டர்ட்டி பிக்சரில் நடித்தாரோ அன்றைக்கே அவர் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார். கான்களுக்காக படம் பார்க்க வருபவர்களை உங்கள் படத்தைப் பார்க்க வைத்துள்ளீர்கள். அப்படி என்றால் உங்கள் பெயரில் கானை சேர்ப்பீர்களா என்று கேட்டதற்கு, வேண்டும் என்றால் அவர்கள் என் பெயரை சேர்த்துக் கொள்ளட்டும் என்றார். இந்த ஆண்டு வித்யா நடித்த கஹானி படம் அவரது புகழை நிலைநாட்டியது. வித்யா படம் என்றால் நம்பிப் பார்க்கலாம் என்ற பெயர் வாங்கியுள்ளார்.

ராஸ் 3
கவர்ச்சிக் கடலில் நீந்தும் பிபாஷா பாசு தனது நடிப்புத் திறனால் மக்களை கட்டிப்போட்ட படம் ராஸ் 3. அதில் அவர் சூனியக்காரியாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்துவிட்டார். படம் ஹிட்டானதற்கு பிப்ஸின் நடிப்பு தான் காரணம் என்றும் கூறலாம்.

இங்கிலீஷ் விங்கிலீஷ்
திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு ஸ்ரீதேவி பெரிய திரையை விட்டு ஒதுங்கியே இருந்தார். பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவிக்கு வயதானாலும் அவர் வசூல் ராணி தான் என்பதை நிரூபித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் கல்லா கட்டியதைப் பார்த்து இரண்டாம் பாகம் எடுக்கவிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications