மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா… ஜான்வி கபூரை பார்த்து உருகும் ரசிகாஸ்!
சென்னை: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் மும்பையில் உலகின் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அணிந்து வந்த உடை பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா தான் ஜான்வி கபூர் அணிந்து வந்த மயில் லெஹங்கா உடையை வடிவமைத்திருந்தார். முழுவதும் மயில் தொகை தோற்றம் கொண்ட ஸ்கர்ட் உடன் நீலமும், பச்சையும் என மயிலின் கழுத்தில் இருப்பது போல ஜான்வியின் பிளவுஸின் நிறம் இருந்தது. ஜான்வியின் இந்த தனித்துவமான உடைக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் மயிலாக மாறிய சின்ன மயிலு என்றும், மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா என அவரை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

ஜான்வி கபூர்: இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஜான்வி கபூர், நான் கொண்டாட்ட நேரத்தில் தனிப்பட்ட அர்த்தமுள்ள ஆடையை அணியவே விரும்புகிறேன். இயற்கை மற்றும் அழகு மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்ட உலகத்திலிருந்து முற்றிலும் தனிமையில் இருக்கும் ஜாம்நகரில் நடந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில், அழகான மயில் என்னை வரவேற்றது. புல்வெளிகளுக்குள் நுழைவது, இறகுகளை அசைப்பது, சாலைகளைத் தாண்டிச் செல்வது, சில சமயங்களில் காலை உணவை உண்பது என ஜாம்நகரில் மயிலைப் பார்த்து ரசித்தேன்.

மயில் நிற லெஹங்கா: இதனால் மயில் நிற லெஹங்காவாக அணிய விரும்பினேன். இதுதான் முழுக்க முழுக்க மயில் இறகு பாவாடையாக்க முடிந்தது. ஆடை வடிவடைப்பாளரான மல்ஹோத்ராவின் அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் குழு இதை ஆடையை வடிவமைத்தார்கள். எப்போதும் என்னை சிறப்பாக உணர வைத்ததற்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.
ராம்சரணுக்கு ஜோடியாக: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரு மகள்கள் உள்ளனர். இவர் இந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் இதுவரை 6 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவாரா படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











