குயீன் ரீமேக் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் நடிகை சார்மி!
மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகை சார்மி. அந்தப் படம், பிரசாந்த் நடிக்கும் ராணி. இந்தியில் பெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தழுவல்.
தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படத்தில் அவர் அறிமுகமாகியிருந்தாலும், காதல் அழிவதில்லைதான் அவருக்கு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

அரை சதம்
இந்தப் படத்துக்குப் பிறகு ஓரிரு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்த சார்மிக்கு, தமிழ் சினிமா கை கொடுக்கவில்லை. தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இடையில் லாடம் என்ற ஒரு தமிழ்ப் படத்தில் மட்டும் நடித்தார். இப்போது அரை சதமடிக்கும் சார்மிக்கு மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பு தமிழில்.

ராணி
அது தியாகராஜன் தயாரிக்கும் ராணி படத்தின் நாயகி வாய்ப்பு. இந்தப் படம் கங்கனா ரணவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இந்த நான்கு மொழிகளிலுமே தியாகராஜன்தான் தயாரிக்கிறார்.

பிரசாந்த்
முக்கியமான வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இந்தப் படம் கதாநாயகியை பிரதானப்படுத்தி எடுக்கப்படுவதால், பிரபலமான நடிகையை நடிக்க வைக்க முயன்று வந்தனர்.

சார்மி ஏன்?
த்ரிஷா, நயன்தாரா போன்றவர்களுக்கு இந்த வாய்ப்பு தரப்படலாம் என செய்தி வெளியானது. இவர்கள் அதற்காக முயன்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிக்க சார்மிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் நான்கு மொழிகளிலுமே சார்மிதான் நாயகியாக நடிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











