போதை பொருள் பயன்பாடு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து நடிகைகளும் கைது.. காவல் துறை அதிரடி
சென்னை: கோலிவுட் ஹீரோக்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கடந்த வருடத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். சில காலம் சிறையில் இருந்த அவர்கள்; இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சென்னையில் துணை நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட ஒன்பது பேர் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அதிரசியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்து வயதினரிடமும் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், போதை ஊசி என அனைத்தும் தாராளமாக புழங்குகின்றன. சமீபத்தில்கூட சிறுவர்கள் சிலர் முழு போதையில் வடமாநில இளைஞர் ஒருவரை சகட்டுமேனிக்கு வெட்டிய சம்பவம் அரங்கேறி நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
திரைத்துறையிலும் போதை: சாமானியர்கள் மட்டுமின்றி திரைத்துறை கலைஞர்களிடமும் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாகவே அந்த துறையில் இருப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி போதையை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக விதவிதமான போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்துவது கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஹீரோக்கள் கைது: கடந்த வருடத்தில்கூட நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். தான் விற்கவில்லை; தன்னுடைய சுய பயன்பாட்டுக்கு மட்டுமே வாங்கியதாக ஸ்ரீகாந்த் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சில காலம் அங்கே இருந்துவிட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார்கள்.
இப்போது நடிகைகள்: அவர்கள் கைது செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏகப்பட்ட முக்கியமான நடிகர்கள் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக பெரிய தலைக்கட்டுக்கள் யாரும் அதில் சிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சென்னையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
ஒன்பது பேர் கைது: அதனையடுத்து நடத்திய விசாரணையில் விக்னேஷ்வரன், வெங்கடேஷ்வரன் என்ற இளைஞர்களிடமிருந்து துணை நடிகைகளான அஞ்சு கிருஷ்ணா, வின்சி உள்ளிட்ட ஒன்பது பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன், கஞ்சா, போதை ஸ்டாம்ப்புக்ள் பறிமுதல் செய்யப்பட்டன. நடிகர்களை தொடர்ந்து இப்போது நடிகைகளும் கைது செய்யப்பட்டிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











