குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த நடிகை.. கோவை சரளாவின் பிறந்த நாள் இன்று!
சென்னை: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆண் காமெடியன்கள் தான் நிறைந்து காணப்பட்டார்கள். ஆனால் ஒரு பெண் காமொடியாளராக நின்று சாதித்தவர் தான் நடிகை கோவை சரளா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலத்திரைப்படங்களில் நடித்து சாதித்த கோவை சரளா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆச்சி மனோரமாவிற்கு பிறகு நகைச்சுவையில் கலக்கி வருபவர் தான் நடிகை கோவை சரளா. கோயம்புத்தூரைத் சேர்ந்த இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவரின் உண்மையான பெயர் சரளா, கோயம்புத்தூரில் இருந்து வந்ததால், கோவை என்ற பெயரை அவரது பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்.

நடிகை கோவை சரளா: சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய கோவை சரளா பள்ளிப்படிப்பை முடித்ததும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தான் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்பார்த்ததோ ஹீரோயின் கிடைத்ததோ ஏதோ சின்ன வேடம், இருந்தாலும் மனம் தளராத கோவை சரளா அந்த படத்தில் பிச்சி உதறி இருப்பார். இந்த படத்தைத் தொடர்ந்து சின்ன வீடு படத்தில் பாக்யராஜின் அம்மாவாக வந்து, டேய் கோபாலு... கோபாலு என்று பேசி மொத்த ஆடியன்சையும் கவர் செய்து விட்டார்.
கமலுக்கு ஜோடி: அந்த படத்தைத் தொடர்ந்து இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு என பல நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருப்பார். குறிப்பாக வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். மேலும், சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இவர் முதலில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபல்யமடைந்த காரணத்தினால் இவர் என்ன படம் நடித்தாலும் அது காமெடி படமாகவே பார்க்கப்படுகிறது. இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது, மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.
குடும்பத்திற்காக வாழ்ந்த நடிகை: பல மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள கோவை சரளா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி, சகோதரன் பிள்ளைகளையே அவர் படிக்க வைத்து வளர்த்து வருகிறார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிகளுக்காக அர்ப்பணித்து அவர்களுக்காகவே வாழ்ந்து வரும் இவர், அவர்களுக்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இன்று பிறந்த நாள்: இந்நிலையில் இன்று நடிகை கோவை சரளா தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைப்பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை கோவை சரளா தற்போதும் மொத்த குடும்பத்துடனும் கோவையில் இருக்கும் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











