கூலி படத்தில் மோனிகா பாடல்.. ஒரே தூசு.. என்ன பூஜா ஹெக்டே இப்படி சொல்லிட்டாங்களே?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. படத்திலிருந்து இதுவரை இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கின்றன. படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஞானவேல் இயக்கியிருந்த அப்படம் பெரிய ஹிட்டாகும் என்று இருந்த எதிர்பார்ப்பு எல்லாம் தவிடு பொடியானது. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினி. கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தபோதே அவருடன் ரஜினி பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து அந்த நிறுவனம் தயாரித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படமும் அதே ரிசல்ட்டை பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

லோகேஷுக்கு முக்கியம்: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படமான மாநகரம் தொடங்கி விக்ரம்வரை ஹிட்டாகவே கொடுத்துவந்தார். ஆனால் அவர் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக ப்ளாஷ்பேக் போர்ஷனை எல்லாம் கலாய்த்து தள்ளினார்கள் ரசிகர்கள். எனவே கூலி திரைப்படத்தின் மூலம் தான் சந்தித்த விமர்சனத்துக்கு சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகி.
படத்தின் கதை என்ன?: இது ஒரு பக்கம் இருக்க கூலி படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் ரஜினி ஃபேன்ஸிடம் எழுந்திருக்கிறது. வழக்கம்போல் ஸ்மக்லிங் போன்ற கதைக்களத்தைத்தான் இதிலும் அவர் எடுத்திருப்பாரோ என்றே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. அதேசமயம் இந்தக் கதையை நான் சில வருடங்களுக்கு முன்னரே எழுதிவிட்டேன்; இது ரஜினிக்காக மட்டும் எழுதப்பட்ட கதையில்லை என்றும் லோகேஷ் விளக்கியிருக்கிறார்.
இரண்டு சிங்கிள்கள்: படத்திலிருந்து இதுவரை மொத்தம் இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் சிங்கிள் லிரிக்கல் வீடியோவில் டி.ராஜேந்தர் நடனம் ஆடியிருந்தார். அதேபோல் இரண்டாவது சிங்கிளில் பூஜா ஹெக்டே நடனம் ஆடியிருக்கிறார். இரண்டு பாடல்களுமே ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் மோனிகா பாடல் உருவான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பூஜா ஹெக்டே ஷேரிங்ஸ்: அந்த வீடியோவில் பேசிய பூஜா ஹெக்டே, "இந்தப் பாடலை முதன்முறையாக நான் கேட்டபோதே எனக்கு பிடித்துவிட்டது. சௌபின் உள்ளிட்டோருடன் வேலை செய்தது ரொம்பவே ஸ்வீட்டாக இருந்தது. அவரது நடனமும் தனித்துவமாக இருந்தது. இந்தப் பாடலை நாங்கள் ஷூட் செய்தபோது ஒரே தூசாகவும், காற்றாகவும் இருந்தது. இருப்பினும் இந்தப் பாடலில் நான் நடனமாடியதை என்ஜாய் செய்தேன்" என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











